தி.மு.க. எம்.பி.- எம்.எல்.ஏ. மோதல்- ஸ்டாலின் திட்ட விழாவில் பரபரப்பு!

தி.மு.க. எம்.பி.- எம்.எல்.ஏ. மோதல்- ஸ்டாலின் திட்ட விழாவில் பரபரப்பு!
Published on

நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டது. இதன்படி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும் காலையில் நிகழ்ச்சி தொடங்கியது. 

நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் பெயர் சரியாகப் போடவில்லை என மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் குறைபட்டுக்கொண்டார். 

அதையடுத்து, மேடைக்கு வந்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கத் தயாரானபோது பயனாளிகள் மேடைக்கு வந்துவிட்டனர். அப்போது பயனாளி ஒருவரிடம் உரிய சான்றிதழைக் கொடுப்பதில் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மகாராசனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் பிடுங்கல் போட்டி ஏற்பட்டது. 

மகாராசன் வேகமாகப் பறித்து பயனாளிக்குக் கொடுக்க, அதை அந்தப் பயனாளியிடமிருந்து தங்க தமிழ்ச்செல்வன் பறித்து மீண்டும் கொடுக்க, அதிகாரிகள் பதற்றம் அடைந்துவிட்டனர். 

உடனே இருவரையும் தனித்தனியாக அதிகாரிகள் விலக்கிவிட்டதும், தொடக்க விழா சற்று நேரத்தில் முடிந்துவிட்டது. 

தொடர்ந்து முகாம் தொடங்கியது. 

வந்திருந்த மக்கள் இப்படி பொறுப்பில் இருப்பவர்களே பொது இடத்தில் அதிகாரப் போட்டியில் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்களே எனத் தலையில் அடித்துக்கொண்டனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com