தி.மு.க. எம்.பி.களுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

தி.மு.க. எம்.பி.களுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!
Published on

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாள்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் 15 நாள்களுக்கு ஒரு முறை அவர்கள் ஆற்றிய பணி குறித்து அறிக்கையை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இன்று காலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மக்களவை, மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், போன்ற முகாம்களில் கலந்துகொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட மகளிரைச் சேர்த்திடும் வகையில்  இந்த முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

”நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து கழகப் பணியாற்றிட வேண்டும்.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒரு முறை தனக்கு அளித்திட வேண்டும்.” என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com