தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

தி.மு.க. கூட்டணியில் ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க.வுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

தி.மு.க. கூட்டணியில் ஐ.யூ.எம்.எல்., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் முதல் தொகுதிப்பங்கீடாக, தி.மு.க. அணியில் இன்று இரு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஐ.யூ.எம்.எல். மூத்த தலைவர் காதர் மொய்தீனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அக்கட்சிக்கு தற்போதைய இராமநாதபுரம் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எம்.பி. நவாஸ் கனியே மீண்டும் அங்கு போட்டியிடுவார் என காதர் மொய்தீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அகில இந்திய கட்சி என்பதால் ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார்.

இதைப்போல, ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாமக்கல் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டியிடுவது யார் என்பது பற்றி கட்சியின் செயற்குழு முடிவுசெய்யும் என்று ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த முறையைப் போல, இந்தத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com