தி.மு.க. பற்றிய பிரதமர் பேச்சு- மு.வீரபாண்டியன் கண்டனம்

Published on

தொகுதி மறுவரையறை பிரச்னையை மாநிலங்களுக்கிடையேயான மோதலாக பிரதமர் மோடி மாற்றுவது கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:

“உத்தரப்பிரதேசத்தில் இன்று கங்கா விரைவு நெடுஞ்சாலையை திறந்துவைத்து பேசிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்திற்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கிடைப்பதை தி.மு.க. எதிர்ப்பதாகவும் , உத்தரப்பிரதேசத்தை இழிவுபடுத்தும் தி.மு.க.வுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

பிரதமர் மோடி அரசியல் உள்நோக்கத்துடன் தி.மு.க. எதிர்ப்பு வெறுப்பை கக்கி இருக்கிறார்.

இத்தகைய பேச்சு இரண்டு மாநில மக்களிடையேயான நல்லுறவை பாதிக்கும் என்பதை உணராமல் , பொறுப்பற்ற முறையில் பிரதமர் பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இது மாநில மக்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் உருவாக்கும். மக்களிடையே நல்லிணக்கத்தைக் கெடுக்கும். இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக அமையும்.

ஒன்றிய மோடி அரசு எதிர்க்கட்சிகளையும் அனைத்து கட்சி தலைவர்களையும் கலந்து பேசாமல் தொகுதி மறுவரை மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி தாக்கல் செய்தது .

தமிழ்நாட்டையும், தென் மாநிலங்களையும் பாதிக்கும் வகையில், அம்மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு அவசர கோலத்தில், தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தது.

மாநிலங்களிடையேயான சமநிலையை பாதிக்கும் வகையிலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்ட அம்மசோதாவை தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலிய இந்தியா கூட்டணி கட்சிகள் தோற்கடித்தன.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தி.மு.க. உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

இது உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கு, தமிழ்நாடு மாநில மக்கள் மீது வெறுப்பை ,கோபத்தை உருவாக்கும். மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை பாதிக்கும். மோதலை உருவாக்கும் .

அரசியல் ஆதாயத்திற்காக, இது போன்று வெறுப்புணர்வைப் பரப்பும் போக்கை பிரதமர் மோடி உடனடியாகக் கைவிட வேண்டும்.” என்று மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com