தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று தி.மு.க.வில் சேர்ந்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க. இணைந்ததை அடுத்து, கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் நிலோபர் ஒதுங்கியே இருந்தார். இதனிடையே, இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு இலக்கிய அணிப் பதவியும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் அண்மையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இருவரையும் தொடர்ந்து நிலோபர் கபில், இன்று அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற தி.மு.க.வின் வடக்கு மண்டல பாக முகவர் பயிற்சி மாநாட்டில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிலோபர் அக்கட்சியில் இணைந்துகொண்டார்.
அடையாளமாக மு.க.ஸ்டாலின் அவருக்கு கருப்புசிவப்பு துண்டு அணிவித்தார்.

