சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், தமிழக ஆளுநர். இந்த முறை மாநில அரசுடனோ திராவிட, இடதுசாரிகள் போன்ற அரசியல் தரப்பினருடனோ அல்ல!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையாக, ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 13ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருது என 50 பேருக்கு வழங்கப்பட்டது.
அதை ஆளுங்கட்சியோ வேறு யாருமோ பொருட்படுத்தவில்லை. ஆனால், அந்த விருதுத் தட்டுடன் இடம்பெற்றிருந்த திருக்குறள் வாசகம் என்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
திருக்குறளின் எண் 944 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்படியொரு திருக்குறளே இல்லை என்பதும், ஆளுநர் கொடுத்த விருதுத் தட்டில் அச்சிடப்பட்டது திருக்குறள்போலி என்பதும் தெரியவந்தது.
தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அளிக்கப்பட்ட விருதுகளை ஐம்பது பேரிடமிருந்தும் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் வழங்குவதாக ஆளுநர் அலுவலகம் கூறியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து இன்னும் சூடான விவாதங்கள் தொடர்ந்தபடி உள்ளன.