
திருப்பரங்குன்றம் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல; நீதி முறைமை கோட்பாடுகளுக்கு முரணானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விமர்சித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமான மேல்முறையீடு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தந்துள்ள தீர்ப்பு சட்டத்தின்படியானதாக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், ”நீதிபதிகளின் தீர்ப்பில் முன் வைக்கப்பட்டுள்ள தரவுகளும், கருத்துக்களும், மாநில அரசின் மீதான விமர்சனங்களும் பிரச்சனையின் தன்மையினை உள்வாங்கியதாகவோ, அரசியலமைப்பு சாசனத்தின் விழுமியங்களுக்கு உகந்ததாகவோ இல்லை.
திருப்பரங்குன்றத்தில் வேறொரு இடத்தில் தீபம் ஏற்றுவது என்ற கோரிக்கை பக்தர்களால் எப்போதுமே முன் வைக்கப்பட்டதில்லை. உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் பல்லாண்டுகளாக தீபத்தை ஏற்றி வருவதை உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வந்துள்ளார்கள். மதத்தைப் போர்வையாகக் கொண்டு அரசியல் நோக்கத்துடன் இயங்கக்கூடிய சில அமைப்புகளால் இப்பிரச்சனை எழுப்பப்பட்டதென்பதும், அத்தகைய அமைப்புகள் மத நல்லிணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருபவை என்பதும் தொடர்ந்து நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் அறிந்ததே. அண்மையில் பாஜகவின் முன்னணித் தலைவர் ஒருவர் "அயோத்தியாக மாற்றுவோம்" என்று பேசியது ஒரு உதாரணமே. ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுமென்ற அரசின் நிலைப்பாட்டை நிராகரித்து இருப்பதும், அரசே அத்தகைய நிலையை உருவாக்கினால்தான் உண்டு என்று கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பதும் எந்த ஆதாரங்களும் அற்றவை மட்டுமல்ல, தொடர்ந்து பதட்டத்தை உருவாக்குகிற அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கிற கருத்துக்கள் ஆகும்.
வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிற அமைப்புகளே தங்கள் கோரிக்கைக்கான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்ற குறைந்தபட்ச நிர்ப்பந்தங்களை அவர்களுக்கு தராத நீதிமன்ற அமர்வு, நேர்மாறாக அந்த இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதற்கான நிரூபணத்தை எதிர்பார்த்திருப்பதும், அவர்களால் தர முடியவில்லை என்பதையே அங்கே தீபம் ஏற்றப்படலாம் என்ற முடிவுக்கான தர்க்க நியாயமாக மாற்றி இருப்பதும் நீதி சார் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.
1994ம் ஆண்டு தீர்ப்பை மட்டும் மேற்கோள் காட்டுவது தீர்ப்புக்கு சாதகமான ஒன்றை தேடி இணைப்பதாகவே இருந்துள்ளதே தவிர, நீதிமன்ற நடவடிக்கைகளின் முழுமையான சாரத்தை உள்வாங்கியதாக இல்லை. திருமூலரின் வார்த்தைகள் எல்லாம் அதன் ஆன்மீக நோக்கத்தை கடந்து தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தர்கா கமிட்டி குறித்த விமர்சனமும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை பாதிப்பதாகும்.
மத நல்லிணக்கம் பேணுவதற்கு இந்த பிரச்சனையை அரசு பயன்படுத்தி இருக்கலாமென்று நீதிமன்றம் கூறுவது வலிந்து கூறுவதாகவே உள்ளது. உண்மையில் இதன் தாக்கங்களை குறித்து எழும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு எதிர்மாறான மதிப்பீட்டை முன்வைப்பதாக உள்ளது. "விளக்கு மட்டுமே, மோதல் அல்ல" (Only Light, No fight) என்று நீதிமன்ற தீர்ப்பு கூறுவது சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் குறிப்பிட்ட சூழலுக்கு பொருந்துவதல்ல. "அமைதியும், நல்லிணக்கமுமே வெளிச்சம், அதுவே அடையாளங்கள் கடந்து ஒளிரும் தீபம்" என்பதையே மதம் கடந்து மனிதத்தை நேசிக்கும் மக்களின் விழைவு.
ஆகவே, மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சட்டத்திற்கு, நீதி முறைமையின் கோட்பாடுகளுக்கு, அரசியல் சாசன நெறிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுவதோடு, தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும்.” என்று பெ.சண்முகம் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.