திருவண்ணாமலையில் தீபத்திருநாளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்களைப் பெற்றுள்ளோம் என்று துணைமுதலமைச்சர் உதயநிதிதெரிவித்தார்.
இதற்காக, சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறை சார்பாக ஒரு குழுவை இரண்டு நாட்களுக்கு முன் அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறினார்.
”அந்த கருத்துக்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது பல ஆலோசனைகள் மேற்கொண்டோம். இந்தக்கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.” என்றும் துணைமுதலமைச்சர் கூறினார்.
திருவண்ணாமலையில் அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு ஆகியோருடன் தீபம் ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை நடத்தியபின்னர், ஊடகத்தினரிடம் பேசியவர், ”கார்த்திகை தீபத்திருநாளில் பக்தர்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே 8 ஆர்.ஓ பிளாண்ட்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது புதிதாக 6 ஆர்.ஓ பிளாண்டுகள் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை செயல்பாட்டிற்கு வரும்.” என்றும் கூறினார்.