தீபாவளி சிறப்புக் காட்சியை ரத்துசெய்ய வேண்டும்!

தீபாவளி சிறப்புக் காட்சியை ரத்துசெய்ய வேண்டும்!
Published on

திரையரங்குகளில் நடைபெறும் முதல் நாள் சிறப்புக் காட்சிகள் குறித்து தீவிர கவலை கொள்கிறது; திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 


இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“பண்டிகை நாட்களில் அல்லது புதியத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில், அதிகாலை, காலை, சிறப்புக் காட்சிகள் எனப்படும் தனிக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது.

ஏன் சிறப்புக் காட்சிகள் இரத்து செய்யப்பட வேண்டும்?

1.அரசு நிர்ணயித்த காட்சி நேரம் மாற்றி அமைக்கப்படுவதோடு, டிக்கெட்டுகளின் விலையும் விதிகளை மீறி விற்கப்படுகின்றன.

2.சட்ட ஒழுங்கு சீர்குலைவு , அதிகாலைக் காட்சிகளால் கூட்ட நெரிசல், சண்டை, போக்குவரத்து தடங்கல் மற்றும் விபத்துகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

3.மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை தவிர்க்கும் நிலையும் உள்ளது.

4.சமூகத்துக்கு தீங்கையும், பொதுமக்களுக்கு அன்றாட பயணத்தில் சிரமத்தையும், குடும்பங்களுக்குப் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகிறது.

சிறப்பு காட்சிகள் என்ற பெயரில், சமூகச் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழக அரசு உடனடியாக முதல் நாள் சிறப்புக் காட்சிகளை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்றும்,

அரசு நிர்ணயித்த காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும்,

விதிகளை மீறுபவர்களின் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

திரைப்படம் கலை அனுபவமாக இருக்க வேண்டும். அது சில தனியாரின் இலாபத்திற்காக, மக்களின் மீது திணிக்கப்பட்ட சுமையாக மாறக் கூடாது.
எனவே, முதல் நாள் சிறப்புக் காட்சிகளை உடனடியாக இரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com