
திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார், தவெகவின் பொதுச்செயலாளரை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை தொடர்ந்து, நாஞ்சில் சம்பத்தும் அண்மையில் தவெகவில் இணைந்தார். இதனால் தவெகவுக்கு பலம் கூடியதாக பேசப்பட்ட நிலையில், விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வக்குமார் கூறியதாவது: “விஜய் ரசிகன், ப்ரியமுடன் விஜய் என 9 பத்திரிகைகளை நடத்தியிருக்கிறேன். 27 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். கூட்டம் வருதெல்லாம் ஓட்டாக மாறாது. தவெகவுக்கு நிறைய கெட்டவர்கள் வருகிறார்கள். விஜய்யின் அப்பாவையே அவரிடம் இருந்து பிரித்தார்கள். நானெல்லாம் எம்மாத்திரம். நம்மை சுற்றி நல்லவர்கள் இருக்க வேண்டும். நல்லவர்கள் இருந்தால்தான் நாம் வளர முடியும். விஜய்யை சுற்றி தீய சக்திகள் தான் உள்ளன.
கூட்டம் வருவது புரட்சியாக மாறாது. புலி படத்தில் தான் எனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னுடைய இடத்துக்கு வர விரும்பியவர்கள் தான் வருமான வரி சோதனையை ஏற்படுத்தி பிளவை உருவாக்கினார்கள். கட்சியின் பொதுச்செயலாளரை ஒரு டிஎஸ்பி எப்படி மிரட்டினார் என்று பார்த்திருப்பீர்கள். பிளாக்ல டிக்கெட் விக்கற மாதிரி புதுச்சேரில நிக்கறார் ஆனந்த்.”என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அவர் திமுகவில் இணைந்தது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (11-12-2025) காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளிக் கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் - “தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பி.டி.செல்வகுமார்?
திமுகவில் இணைந்துள்ள பி.டி.செல்வக்குமார், விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் எனத் தெரிகிறது. தவிர இவர், ’கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் விஜய்யுடன் நடித்தும் உள்ளார். மேலும், விஜய்யின் ‘சுறா’, ‘வில்லு’ ‘போக்கிரி’ ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.