தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன் பெயரை சொல்லாமல் அவரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்பதற்காக தவெகவில் செங்கோட்டையன் இணைந்தார்.
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிபாளையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது பேசுபொருளானது. இந்த நிலையில் கோபியில் நேற்றுஎடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்தின் போது செங்கோட்டையன் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை மிக கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க உங்களை தேடி வந்தார்.. பதவியை ராஜினாமா செய்தபோது உங்களைத் தேடி வந்தாரா? 50 ஆண்டுகால அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கான பாராட்டு விழாவில் ‘அவர்’ கலந்து கொள்ளவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று சொன்னவர் இன்னைக்கு மாற்று கட்சியில் சேரும்போது யாரு படத்தை போட்டுகிட்டு போனாரு? அவருக்கு கட்சியில உரிய மரியாதை கொடுத்தோம்.. ஆனால் அவரு திருந்தலையே.. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய பின்னரும் திருந்தலை.. வேறு இயக்கத்தினரை சந்தித்து பேசினார்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.. அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால அவரை கட்சியில் இருந்து நீக்கினோம். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி ஆட்சி அமைக்கும் போது இந்த கோபிசெட்டிபாளையத்தில்தான் முதல் வெற்றி விழாவை கொண்டாடுவோம்.. எடப்பாடி தொகுதியை விட முதல் தொகுதியாக இந்த கோபி தொகுதியை மாற்றி காட்டுவோம்.. இது நடக்கும்.. அவர் மாற்று கட்சிக்கு போயிருக்கிறார்.. எங்கிருந்தாலும் வாழ்க..போனவர் சும்மா இருந்தா பரவாயில்லை.. தூய்மையான ஆட்சியைக் கொடுப்போம், என்கிறார்.. அப்ப எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகள் எல்லாம் தூய்மையான ஆட்சிகள் இல்லையா? துண்டை மாற்றியதால் கருத்தும் மாறிப் போயிடுச்சு.. எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.. எடப்பாடி பழனிசாமி நான் ஒருவன் அல்ல... 2 கோடி அண்ணா திமுக தொண்டர்களில் ஒருவன் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வான்.” என்றார்.