தூத்துக்குடியில் மீண்டும் ஓர் ஆணவக்கொலை- தாய், மகன் மீது புகார்!

Published on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், தெற்கு மயிலோடை கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19) என்பவரும், தலித் இளைஞர் ஹரிபிரசாத் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர். இக்காதலுக்கு சாதியின் பெயரால் எதிர்ப்பு தெரிவித்து வந்த அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம், அவரது தாய் எஸ்தர் பாலின், சித்தப்பா சங்கரலிங்கம் ஆகியோர் கடந்த 09.05.2026 அன்று அபிசெல்வியை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இக்கொடூர சாதி ஆணவக் கொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.

”கடந்த 2 மாதங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 5 சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. சக்தி வாகினி எதிர் ஒன்றிய அரசு மற்றும் திலீப் குமார் எதிர் தமிழ்நாடு அரசு வழக்குகளில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில் இம்மூன்று மாவட்டங்களையும் கௌரவம் என்ற பெயரிலான குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தி இக்குற்றங்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர் சுபாஷ் (16.04.2026), திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் (02.05.2026), தூத்துக்குடி மாவட்டம், கரடிக்குளத்தைச் சேர்ந்த சஞ்சய் (17.05.2026), திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி (09.06.2026) மற்றும் தற்போது தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி (09.06.2026) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 5 வழக்குகளில் 1 வழக்கு மட்டுமே எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களை காதலித்த அவர்களது இணையர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதாலும், மற்ற 2 வழக்குகளில் ஒரே சாதியில் காதலித்தாலும் பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, குடும்ப கௌரவம் உள்ளிட்ட காரணங்களால் படுகொலை செய்யப்பட்டதாலும் இந்த 4 படுகொலைகளில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்த வில்லை. இதன்மூலம் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை திருத்த சட்டமும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமும் போதுமானது இல்லை.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட்ட அரசியல் மற்றும் சமூகநீதி இயக்கங்களின் தொடர் வலியுறுத்தலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளை விரைந்து பெற்று சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.” என்று தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com