சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வு அறை கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை; சேவை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி மேயராக நான் பதவியேற்றபோது இந்த நகரை தூய்மையான நகரமாக மாற்ற நினைத்தேன். அதற்காக தூய்மை பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினோம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதை மேலாண்மை செய்ய பல்வேறு முன்னெடுப்புகளை கொண்டு வந்தேன். அதுதான் இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் மாற்றத்துக்கு முதல் படி. இந்த மாநகரத்தை தூய்மையாக வைத்திக்கும் தூய்மை பணியாளர்களை பாதுக்காக வேண்டியது எங்களின் கடமை. தூய்மை பணிகளின் மாண்பு காக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். அவர்களின் நலன் பாதுக்காக வேண்டும். இதுதான் சமூகநீதி. இந்த சமூகநீதி பயணத்தில் உங்களின் சுயமரியாதை காத்து, உங்களின் பசியை போக்கத்தான் முதலமைச்சரின் உணத்திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
தூய்மையான முறையில் சமைத்து, டிபன் பாக்ஸில் போட்டு, வெப்ப காப்பு பையில் எடுத்துச் செல்லப்பட்டு, உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான கட்டடட்தில் உணவு வழங்கப்படும்.
இரவு பார்க்காமல் தூய்மைப் பணியார்கள் உழைக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு தனியாக ஓய்வறை இல்லை என பலபேர் என்னிடம் சொன்னார்கள். பெருநகர சென்னை மாநாகராட்சின் 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வு அறை 300 சதுர அடியில் கட்டப்படும்.
முதலமைச்சர் உணவுத் திட்டம், வருகிற டிசம்பர் 6ஆம் தேதி முதல் அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளிலும் விரிவுப்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களின் மற்ற கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.” என்றார்.