தொகுதி வரையறை- ஸ்டாலின் தவறான தகவல் பரப்புகிறார்: எடப்பாடி

தொகுதி வரையறை- ஸ்டாலின் தவறான தகவல் பரப்புகிறார்: எடப்பாடி
Published on

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலைப் பரப்புவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார். 

கோவை, காந்திபுரத்தில் இன்று காலையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் அவர், ஸ்டாலின் மீது விமர்சனத்தை முன்வைத்தார். 

அவர் பேச்சிலிருந்து சில துளிகள் : 

“இன்று ஊர் முழுக்க கருப்புக்கொடி கட்டுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், கோவையில் எங்கும் இல்லை. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில் பாதிப்பு என்கிறார் ஸ்டாலின்.

• ஏற்கெனவே உள்துறை அமைச்சர் இங்கு வந்தபோது, தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். பிறகு எதற்கு கருப்புக் கொடி என்று தெரியுமா..? இவர் சாதாரண ஆளில்லை. எப்படியும் நாடாளுமன்ற வரைமுறை செயல்படுத்தப்படும் என்று இவருக்கு முன்கூட்டியே தெரியும். கருப்புக்கொடி காட்டினால், நானும் போராட்டம் செய்தேன், மத்திய அரசு பணிந்துவிட்டது என்பார். ஸ்டாலின் நினைப்பதற்கும் மேலாக அற்புதமாக நாடாளுமன்ற மறுவரையறை செய்யப்போகிறார்கள். அப்போது அவர், நான் கருப்புக் கொடி கட்டியதால் மத்திய அரசு பயந்துபோய் அவர் சொல்வதை ஆமோதித்ததாகச் சொல்வார்.

• மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில்தான் செயல்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை. அவர் ஸ்டாலின். ஏனென்றால் அவர் கண்ட கனவு பலிக்கவில்லை. அதற்குத்தான் கருப்புக் கொடி போராட்டம்.

• இங்கு யாருமே கட்டவில்லை. அவர் தமிழ்நாடு பதறும் என்கிறார். தி.மு.க. ஆட்சி இருக்கும்வரை மதுரை மண்ணில் அவர் காலே வைக்கவில்லை, அ.தி.மு.க. ஆட்சியில்தான் மதுரைக்கே சென்றார். இவரது வீராதி வீரச் செயல் எல்லாம் பார்த்துவிட்டோம். தி.மு.க. கூட்டணி சொல்வது தவறு, மத்திய அரசு உறுதிமொழி கொடுத்துவிட்டு, அதன்படி எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மறுவரையறை செயல்படும்.

• பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு செய்வதை தடுப்பதற்குத்தான் இத்தனை வேலைகள் செய்கிறார் ஸ்டாலின். இதை செய்தால் பெண்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் அதைத் தடுக்கத்தான் இப்படி கருப்பு கொடி கட்டச்சொல்லி தவறான தகவல் பரப்புகிறார், அதை யாரும் நம்ப வேண்டாம்.

• இன்னொரு பெரிய மனிதர் சிதம்பரம். எடப்பாடி பழனிசாமி சொல்வது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார். வேறு யார் சொல்ல வேண்டும்.. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் சொன்னார்கள் என்றுதான் சொல்ல முடியும். சிதம்பரம் சொன்னார் என்றா சொல்ல முடியும்? எத்தனை வருஷம் மத்தியில் மந்திரியாக இருந்தீர்கள், தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டுவந்தீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்குத் தகுதி இருக்கிறதா…? என்ன யோக்கியதை இருக்கிறது?” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com