தொலைக்காட்சி ஆசிரியர் விஜயன் விவகாரம்- கட்சிகள் சொன்னது என்ன?

புதிய தலைமுறை முதுநிலை ஆசிரியர் விஜயன்
புதிய தலைமுறை முதுநிலை ஆசிரியர் விஜயன்
Published on

புதிய தலைமுறை தொலைக்காட்சி முதுநிலை ஆசிரியர் விஜயன் இரு நாள்களாக விசாரிக்கப்பட்ட முறை, அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனமும் விமர்சனமும் செய்துள்ளனர். 

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி:

”பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் த.வெ.க. அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது த.வெ.க. அரசு.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்:

“ த.வெ.க. ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் திருவல்லிக்கேணி காவல் துறை புதிய தலைமுறை தொலைகாட்சி முதுநிலை ஆசிரியர் விஜயனை அலைக்கழித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

குற்றச்சாட்டு எழும்போது, அது தொடர்பாக விசாரணை மேற்கொள்வது காவல்துறையின் சட்டம்சார்ந்த கடமையாகும். ஆனால், அந்த விசாரணை சட்ட முறைகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.

முதுநிலை செய்தி ஆசிரியர் விஜயன் நெறிப்படுத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வோர் அனைவரும் அவரோடு தொடர்பில் இருப்பதும், இவரும், அவர்களை தொடர்பு கொள்ளுவதும் தொழில் சார்ந்த பணி என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு விஜயன் மீது குற்றம் சுமத்த முயல்வது அதிகார அத்துமீறலாகும்.

இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்ட விளக்கக் குறிப்பு அபத்தமானது. கடந்த கால ஆட்சிகளில் நடந்த அத்துமீறல்களை பட்டியலிட்டு, இன்றைய தவறை நியாயப்படுத்தும் வகையில் வலிந்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை அச்சுறுத்தப்படுவதும், கருத்து சுதந்திரத்தை பறிப்பதும் மற்றும் மறுப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது.

இத்தகைய நடவடிக்கைகளை தவெக அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிப்படுவதை கைவிட்டு, அவர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழலை உறுதிப்படுத்திட வேண்டும்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி :

“ மூத்த பத்திரிகையாளர் விஜயனை அலைக்கழித்த காவல்துறைக்கு கடும் கண்டனம் செய்வோம்.”

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன்:

“ கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணைக்காக காவல்துறையின் அழைப்பின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் திரு.விஜயன் அவர்களிடம் விசாரணை எனும் பெயரில் காவலில் வைத்து அலைக்கழித்ததோடு, அவரின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தவெக சட்டமன்ற உறுப்பினர் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல்துறை, கடந்த மே மாதம் இரவு 8 ஆம் தேதி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட போலிக் கடித விவகாரத்தில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன்?

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதோடு, புதுச்சேரியில் தங்கியிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்து, காரில் வைத்து கடிதம் ஒன்றில் அவர் கையெழுத்திடுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய முனைப்பு காட்டாத காவல்துறை, தற்போது, ஆளுங்கட்சி விவகாரம் என்பதால் விசாரணை எனும் பெயரில் ஊடகவியலாளர் திரு.விஜயன் அவர்களை அலைக்கழித்திருப்பது பத்திரிகை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும்.”

நா.த.க. தலைவர் சீமான் :

” புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி, நெறியாளுகை செய்து வரும் ஊடகவியலாளர் அன்பிற்கினிய தம்பி விஜயன் அவர்களை விசாரணை எனும் பெயரில் தவெக அரசின் காவல்துறை அழைக்கழிப்பு செய்வதும், அச்சுறுத்துவதுமான போக்கு அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்தாரென்பதற்காகவே தம்பி விஜயனைக் காவல்நிலையத்துக்கு அழைத்து மிக மோசமாக நடத்துவதும், அவரது அலைபேசியைக் பிடுங்கி வைத்துக் கொள்வதும், கண்ணியக்குறைவாக நடத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

நாடறியப்பட்ட ஊடகவியலாளரான தம்பி விஜயன் மீது விசாரணை எனும் பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டல். 60 நாட்களிலேயே தவெக அரசின் நிர்வாகச்சீர்கேடு வெட்ட வெளிச்சமாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதனைப் பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் யாவரும் குறிவைக்கப்படுவதும், அரசின் கம்பிவடத் தொலைக்காட்சியிலிருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமானப் போக்குகள் கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத்தாக்குதலாகும்.

திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்! பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைமிக்கப் பெருந்தலைவர்களின் பெயர்களையெல்லாம் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் இன்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும். தவெக அரசின் இந்தக் கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளாவிடில், சனநாயக ஆற்றல்கள் மூலம் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com