மதுரையில் முடிவடைந்த த.வெ.க. இரண்டாம் மாநாட்டுக்காக அதன் தலைவர் நடிகர் விஜய் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வழக்கமான வசனங்களுடன்தம் கட்சியினர் பலருக்கும் பெயர் குறிப்பிட்டும் அணிகளுக்கு பொதுவாகவும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த மாநாடு கட்சியின் கொள்கைப் பயணத்தை ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதை சற்றும் சமரசமில்லாமல் செய்வோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லனவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம்; அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புறக்கணிப்போம் எனக் கூறியுள்ள விஜய், ”1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை 2026ஆம்ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டுவது நிச்சயம்.” என்றும் தன்னுடைய நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, த.வெ.க. மதுரை மாநாட்டுக்காகச் சென்று இறந்தவர்களுக்கு அவர் இரங்கல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில்,” நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்.” என்று விஜய் கூறியுள்ளார்.