நாங்கதான் சீனியர்... - சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு

உதயநிதி
உதயநிதி
Published on

”முதலமைச்சர் விஜய் நேற்று எங்கள் தலைவருடைய வீடுகளுக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகள் பெற்றுக்கொண்டு சென்றார். அந்த அரசியல் நாகரிகம் இந்தப் பேரவையிலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம், எதிர்பார்ப்பு.” என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார். 

புதிய அவைத்தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் இன்று பதவியேற்றதை முன்னிட்டு உதயநிதி பேசியது:

” ஏற்கனவே நான் சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சட்டப் பேரவையில் எதிரி கட்சியாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். எங்கள் தலைவர் அவர்கள் சொன்ன மாதிரி திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு ஆக்க சக்திதான்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இந்தப் பேரவைக்கென்று ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறி இருக்கிறது என்றால் இந்தப் பேரவையில் நடந்த விவாதங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவையெல்லாம்தான் காரணம்.

பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக, வழிகாட்டக்கூடிய வகையில் செயல்பட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சட்டமன்றப் பேரவை இந்தத் தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவை. அப்படிப்பட்ட இந்தப் பேரவையில் ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுத்து ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேரவைத் தலைவர் அவர்கள் என்றைக்கும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.

நாம் இங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதிரெதிர் வரிசையில் உட்கார்ந்து இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் பொழுது நாம் அனைவரும் ஒரே வரிசையில் முன் வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அதைத்தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரும்புகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது.

எங்களுடைய தலைவர் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை, "இது எனது அரசு அல்ல நமது அரசு" என்று எங்களுடைய தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்வார். அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். சென்ற திராவிட மாடல் அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லாமல் வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகத்தான் செயல்பட்டு வந்தது.

ஆகவே இந்தப் புதிய அரசும் அனைவருக்குமான அரசாக, உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகச் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பேரவைத் தலைவரும் முதலமைச்சரும் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் தி.மு.க தான் சீனியர் பேட்ச், அது உங்களுக்குத் தெரியும். 1967-லேயே ஆட்சிக்கு வந்தது தி.மு.க. நாங்கள் தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கெள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மாநிலத்தின் நலன்தான் மிக மிக முக்கியம்.

பேரவைத் தலைவர் அவர்களே! நீங்கள் போட்டியின்றித் தேர்வாகி இருக்கிறீர்கள். மாண்புமிகு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான நானும் அவை முன்னவரும் உங்களை இந்த இருக்கையில், அமர வைத்திருக்கிறோம். இன்றைக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறோம். இனி எங்கள் இரண்டு தரப்பையும் நீங்கள் தான் கையைப் பிடித்து அரவணைத்து கோபம் இல்லாமல், கோபப்படாமல் - நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று தெரியும் - உங்களைக் கோபப்படுத்துகின்ற மாதிரி எந்தச் செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம். இரண்டு தரப்பையும் நீங்கள் வழிநடத்த வேண்டும்.

சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில் தான் இந்த அவையின் பெருமை நிச்சயம் அடங்கி இருக்கிறது. பொதுவாக இதற்கு முந்தைய சட்டமன்றப் பேரவையை எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி வரிசையில் அதிக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அதைவிடக் குறைவான உறுப்பினர்களும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசை வலிமையாக இன்றைக்கு அமைந்திருக்கிறது. அதுதான் இந்தப் பேரவையின் இன்னொரு கூடுதல் சிறப்பு.

இதன் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அது என்னவென்றால், எதிர்க்கட்சி வரிசை மிக மிக வலிமையாக இருந்து இந்த அரசை, புதிய அரசை வழிநடத்த வேண்டும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆகவே மக்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற மாதிரி எங்களுடைய பணிகள் நிச்சயம் இருக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இந்த அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதை எதிர்க்கட்சிகள் எல்லோரும் விமர்சித்திருக்கிறோம். அதற்கு ஆளுங்கட்சியும் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள், நானும் பார்த்தேன். எங்களது கருத்து என்னவென்றால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய மேற்குவங்க மாநிலத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படவில்லை. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அது பாடப்பட்டிருக்கிறது.

மேற்குவங்கத்தில் இன்றைக்கு யார் ஆளுநராகச் சென்று உட்கார்ந்து இருக்கிறார் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இங்கே ஆளுநராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று பேரவையின் மரபையே மாற்றச் சொன்னவர்தான் இன்றைக்கு மேற்குவங்கத்தில் ஆளுநராக இருக்கிறார். அதை நாங்கள் உறுதியாக, எங்களது தலைவர், அப்போதைய முதலமைச்சர் உறுதியாக மறுத்தார். அதனால் 2023-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடம் அவர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டுச் சென்ற காட்சிகளை எல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இதன் மூலமாக நாங்கள் சொல்ல வருவது, அடுத்து விரைவிலேயே இந்தப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவிருக்கிறார். ஆகவே ஏற்கனவே உங்கள் அரசின் பதவியேற்பு விழாவில் நடந்த அந்தச் சம்பவம், அந்தத் தவறு மீண்டும் இந்தப் பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது, நாங்களும் அனுமதிக்க மாட்டோம்.

பேரவையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்திற்கு நாம் தள்ளிப்போக விடக்கூடாது. இந்த அரசு அதற்கு அனுமதிக்கக்கூடாது என்று நான் இங்கே கேட்டுக்கொள்கின்றேன்.

மிகவும் விழிப்போடு இருந்து நம்முடைய உரிமையை, மரபைப் பாதுகாக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வலியுறுத்தி நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வண்டிக்கு பிரேக் எப்படியோ, ஒரு காளைக்கு மூக்கணாங்கயிறு எப்படியோ, அப்படித்தான் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குச் சொல்லி இருக்கிறார்.

ஆகவே பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில் ஆளுங்கட்சியின் செயல்பாட்டை உற்று நோக்கி உங்களின் நிறைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் நிச்சயமாகச் செயல்படுவோம்.

இந்த அவைக்குப் புதியவர்கள், முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். அதில் மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல நீண்ட வருடங்களுக்குப் பிறகு நிறைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே இடம் பெற்று இருக்கிறீர்கள். அதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். எது எப்படியானாலும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்.” என்று உதயநிதி பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com