
மூத்த அமைச்சர் துரைமுருகன் மீண்டும் இப்போதைய தொகுதியிலேயே போட்டியிடவுள்ளதாக மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், மாதாண்டகுப்பம் ஊராட்சியில் அரசுநலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. மொத்தம் 169 பேருக்கு 1.31 கோடி மதிப்பில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை முதலிய உதவிகளை அவர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அவரிடம் கோயில் கட்ட நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர்,தேர்தல் முடிந்ததும் நிதி ஒதுக்கப்படும் என்றதுடன், ”இப்படிச் சொல்லிவிட்டு செய்யாவிட்டால் தெய்வம் எனக்கு தண்டனை கொடுக்கும்; அதைப்போல, எனக்கு வாக்களிப்பதாகச் சொல்லிவிட்டு செய்யாமல் போனால் தெய்வம் கூலி தரும்.”என்று கூறினார்.
இதன்மூலம் காட்பாடி தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அடிக்கடி உடல்நலிவு ஏற்படுவதாலும் தன் மகன் மாவட்டச்செயலாளர் பதவிக்கு வந்துவிட்டதாலும் தேர்தல் போட்டியிலிருந்து துரைமுருகன் இந்த முறை விலகிவிடுவார் எனப் பேசப்பட்டுவந்தது. அதற்கு அவரே இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.