நிதிப் பகிர்வு- அரவிந்த் பனகாரியாவுக்கு அன்புமணி கடிதம்!

Anbumani Ramadoss
அன்புமணி ராமதாஸ்
Published on

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் பங்கின் அளவு ஒவ்வொரு ஐந்தாண்டும் குறைந்து வருவதால், அதை சரி செய்யும் வகையில் நிதிப் பகிர்வு கொள்கையில் மாற்றம் செய்யவேண்டும் என்று நிதி ஆணையத் தலைவர் அர்விந்த் பனகாரியாவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கடிதம் அனுப்பியுள்ளார். 

அந்தக் கடித விவரம்: 

“ மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய - மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசுடன் விவாதிப்பதற்காக தங்களின்  தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. வரிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கு உரிய பொருளாதார நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே, மாநில நிதி உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்காக குரல் கொடுத்துவரும்  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியா விடுதலையடைந்து, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் 1952&ஆம் ஆண்டு முதல்  நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவை அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாயில் ஒரு குறிப்பிட்ட  விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே மத்திய அரசின் வரிப் பகிர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை ஆகும். இந்த நிலை என்றாவது ஒரு நாள் மாற வேண்டும். ஆனால், 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆன பிறகும்  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி போக்கப்படவில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சியடையாத மாநில மாநிலங்களுக்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு தான் நிதி வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. மத்திய அரசின் மொத்த வரி  வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஆகும்.  ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41% மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 4.079% மட்டும் தான் கிடைக்கிறது.

அதாவது தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெறப்படும் ஒரு ரூபாயில் 29 காசுகள் மட்டும் தான் வரிப்பகிர்வின் பங்காக திரும்ப அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவு ஆகும். இது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

1952&ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதலாம் நிதி ஆணையத்தின் அறிக்கைப்படி, இன்றைய தமிழ்நாட்டை உள்ளடக்கியுள்ள அன்றைய சென்னை மாகாணத்திற்கு 15.25% நிதி பகிர்ந்தளிக்கப் பட்டது. ஆனால், அதன்பின் இப்போது வரை தமிழகத்திற்கான பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தாராளமயமாக்கள் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 1992&ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திற்கான வரிப்பகிர்வு பங்கின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது.

1957&ஆம் ஆண்டில், இரண்டாவது நிதி ஆணையத்தின் அறிக்கைப்படி 8.40% ஒதுக்கப்பட்டது. அதன்பின் முறையே 8.13%, 8.34%, 8.18%, 7.94%, 8.05%, 7.56%, 7.93%, 6.63%, 5.38%, 5.31%, 4.96%, 4.02% எனக் குறைந்து பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.09% ஆகக் குறைந்து விட்டது.

ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி வருவாயில் 7.931%  தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. இந்த வகையில் மட்டும் தமிழ்நாட்டிற்கு கடந்த 30 ஆண்டுகளில் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்பது மத்திய அரசு வரையறுத்துள்ள சில அளவீடுகளின் அடிப்படையிலானது தானே தவிர, உண்மையாக தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை. 2024&25ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.44,042 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 1.39% மட்டும் தான்.

அதேபோல், சுகாதாரத்துறைக்கு நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.20,198 கோடி மட்டுமே. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 0.64% தான். ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கான ஒதுக்கீடு 6 விழுக்காடாகவும், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு  3% ஆகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறிக் கொண்டு, அதன் நிதியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, சாலைகள், பிற கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அதற்கான முதன்மைக் காரணம் தமிழக அரசிடம் நிதி இல்லாதது தான்.
2017&ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மது, எரிபொருள் தவிர்த்து மீதமுள்ள பொருட்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது. அதனால், மாநிலங்களின் வருவாய் ஆதாரம் குறைந்து விட்ட நிலையில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கையும் குறைப்பது பெரும் தண்டனையாகி விடும்.

மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50%  ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த  மாநிலத்திற்கு வழங்கும் வகையில் வரிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.  அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.  அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும்,  நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com