நீதிபதி ஸ்ரீமதியின் கருத்து அரசமைப்புக்கு எதிரானது - வீரபாண்டியன்

சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
Published on

சனாதனம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதியின் கருத்து அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

”தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கருத்தரங்க நிகழ்வில் சனாதனம் குறித்து பேசியது, வெறுப்பு பேச்சு என்றும், 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வது தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பாக பேசியது குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக டெல்லியைச் சேர்ந்த பாஜக ஐடி பிரிவு தேசிய தலைவர்  அமித் மாளவியா மீது சிசிபி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அமித் மாளவியா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி எஸ். ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு “ஒழிப்பு” என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது  எனக் கூறி,  “சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது. இதன் பொருள், அழிப்பவரின் கருத்துக்குகிணங்காத செயல்பாடுகளை ஒடுக்குவதாகும். அப்படி பார்த்தால் சனாதன தர்மத்தை பின்பற்றும் ஒரு மக்கள் குழுவே இருக்கக் கூடாது, என்றால் அதற்கு பொருத்தமான சொல் இனப்படுகொலையாகும்” என விநோதமான வியாக்கியனாத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் இக்கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது. சமூக, பொருளாதார அரசியல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்தை வெளியிட்டு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி நீதிபரிபாலன நடைமுறையை வகுப்புவாத பக்க சார்புக்கு நெட்டித் தள்ளியுள்ளார்.

சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், அது சாதிய ஏற்றத்தாழ்வு, சாதி அமைப்பு, பிறப்பு அடிப்படையிலான குலத்தொழில் முறை, தீண்டாமை கொடுமைகள் - சாதியம், சாதியின் பெயரால் அடித்தட்டு சாதியினருக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் - அடக்குமுறைகள், அகமணத்திருமண முறை, ஆண் ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிப்பது என்பது கற்றறிந்த நீதியரசரின் கவனத்திற்கு வராதது வியப்பளிக்கிறது. சனாதன தர்ம ஒழிப்பு என்பது சாதி ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் பொருள்படும். அதை பின்பற்றுபவர்களை ஒழிப்பது என்பதாகாது. ஆனால், அதற்குமாறாக, “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அதை பின்பற்றுபவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என பொருள்படும்” என நீதிபதி எஸ்.ஸ்ரீமதி கூறுவது சங்பரிவார் அமைப்புகளின் குரலின் எதிரொலியாகும்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் இத்தீர்ப்பு வினோதமானதாகவும், வேடிக்கையானதாகவும், சிறுபிள்ளைத்தனமானதாகவும் உள்ளது. நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது.

சனாதன தர்மத்திற்கு ஆதரவான இத்தீர்ப்பு ஒருதலைபட்சமானது. இந்துக்களில் 85 விழுக்காட்டிற்கு மேலானதாக உள்ள பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப் பட்டோருக்கு எதிரானது. அனைத்து சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் எதிரானது.

இத்தீர்ப்பு சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல், மற்றும் பாலின அசமத்துவத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது. சாதியத்தை, தீண்டாமையை, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது.

எனவே, இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி எஸ்.ஸ்ரீமதியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டிக்க வேண்டும்  என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.”என்று மு.வீரபாண்டியன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com