நீர்வளம் போச்சு, நிலத்தைத் திருப்பித் தரணும்!

என்.எல்.சி.
என்.எல்.சி.
Published on

விளை நிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.  

”கடலூர் மாவட்டத்தில் இயற்கையிலேயே ஆர்டீசியன் நீர் ஊற்றுகள் நிரம்பிய நிலப்பகுதி. தெற்கே வெள்ளாறும், மேற்கே மணிமுக்தாறும், வடக்கே கெடிலமும், பெண்ணையாறும், கிழக்கே வங்க கடலும் சூழ்ந்த ஆகிய கிராமங்கள் நிறைந்தப்பகுதியாகும். நெல்லும், கம்பும், சிறுதானியங்களும், பணப்பயிர்களும் முப்போகம் விளையக்கூடிய கடலூர் மாவட்ட கிராமங்களில் நீர்வளம் ஏராளம்.” என விவரித்துள்ள அவர், 
 
”ஆனால், என்.எல்.சி இந்தியா நிறுவனம் தொடங்கிய பிறகு, சுரங்க நெறிமுறைகள் பின்பற்ற படாமலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதும், அபாயகரமான ராசய வேதிப்பொருட்கள் மண்ணில் ஆழ்துளையிட்டு வெடிக்க செய்தும், நீர்வளத்தை திட்டமிட்டு பாழக்குக்கிறார்கள்.
 
இதனால் காரணமாக, கடலூர் மாவட்ட மக்களை உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், நுரையீரல் ஒவ்வாமை, மூச்சு திணறல், சிறுநீரக கோளாறு, இருதய பிரச்சனை உள்ளிட்ட நோய்கள் அதிகப்படியாக தாக்குகின்றன.”என்று கூறியுள்ளார். 
 
”என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளை கைவிட வேண்டும் என அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக, வாணதிராயபும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் இறக்கப்பட்டு ஆக்கிரமிக்கும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக 500க்கும் மேற்பட்ட காவலர்களை குவித்து, விவசாயிகள், கிராம மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.” என்றும் வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 
 
”வாணாதிராயபுரம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதனை சிறிதும் மதிக்காமல், அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பில், விளை நிலங்கள் கையகப்படுத்த என்.எல்.சி நிர்வாகம் முயன்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
 
வானதிராயபுரம், தென்குத்து, பின்னாச்சிகுப்பம், தென்குத்து புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்டு, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.

எனவே, என்.எல்.சி விவகாரத்தில் விரிவான விசாரணை செய்து இந்திய அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் விரிவான அறிக்கை வெளியிடுவதோடு, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நில எடுப்பால் பாதிக்கப்படும் கிராம எல்லைக்கான பத்திரப்பதிவு முடக்கத்தை உடனடியாக ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். 
 
மேலும், “ 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (10/99) 3ம் பிரிவு உட்பிரிவு 2ன் கீழான பொது அறிவிப்பை வெளியிட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் கையப்படுத்திய நிலம் மேற்கண்ட திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை என்றால் உரியவரிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும்.
 
கடந்த 20 ஆண்டுகளாக என்.எல்.சி இந்தியா நிறுவனம் தொடர்ந்து, பொதுமக்கள் மீது அடாவடி, அட்டூழியங்களை செய்து வருகிறது. ஜனநாயக ரீதியில், என்.எல்.சி நிறுவனத்தின் அயோக்கிய தனத்தை எதிர்த்து போராடினால், தமிழக காவல்துறையின் ஒரு சில காவல் அதிகாரிகள் கிராம மக்களின் மீது வழக்கு பதிவு செய்வது வாடிக்கையாக உள்ளது. இது விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் வேதனை தருகிறது. எனவே கிராம மக்கள் மீது போடப்பட்டுள்ள போராட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய முன் வர வேண்டும்.
 
கடந்த 2011 முதல் 2015 வரை நடந்த கிராம சபை கூட்டங்களில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு 1 சதுர அடி கூட நிலம் தரமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, கிராம மக்களுக்கு தமிழ்நாடு அரசு துணை நின்று, அவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்.
 
கிராமங்களின் அடிப்படை வசதிகளான சாலை அமைத்தல், தங்குதடையின்றி சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடம், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், பொது நூலகம் உள்ளிட்ட அடிப்படை கிராம கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.
 
நீர்வளம் நிறைந்த கிராமங்களில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட நீர்வளத்தை ஈடுகட்டும் விதமாக என்.எல்.சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை, கிராமங்களுக்கு தங்கு தடையின்றி விவசாய நிலத்திற்கு தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
முக்கியமாக, என்.எல்.சி விரிவாக்கப் பணிகளுக்காக கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவலர்களை திரும்ப பெறுவதோடு, நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு, கிராம மக்கள், என்.எல்.சி நிர்வாகம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.


logo
Andhimazhai
www.andhimazhai.com