
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயனின் இல்லத்தில் ஒன்றிய பாஜக அரசு, அமலாக்கத்துறையை ஏவி, சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்கவும், பணிய வைக்கவும் இத்தகைய தந்திரத்தை ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே வழக்கமாகக் கொண்டுள்ளனர் மோடியும் அமித் ஷாவும்.
நெருப்பைக் கரையான் அரிக்கும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? உங்கள் நாடகம் சிபிஐ(எம்)-யிடம் எடுபடாது என்பதை புரிந்துகொள்வீர்கள். ஒன்றிய பாஜக அரசின் இந்த இழிசெயலுக்கு எங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பிஜேபி அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே உட்பட அகில இந்திய தலைவர்கள் பலரும் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் உடனடியாக கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகளுக்கு மாநில செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.” என்று கூறியுள்ளார்.