திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் ஹாஜா முகைதீன் பாட்டிலால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று (18.05.26) இரவு 11.30 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் பாசித், சிலருடன் ஹாஜா முகைதீனின் வீட்டிற்கு வந்து உதவி கோருவதுபோல் அவரை வெளியே அழைத்துள்ளனர்.
அவர்களிடம் பேசுவதற்காக ஹாஜா முகைதீன் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அப்துல் பாசித் மறைவாக வைத்திருந்த பாட்டிலை எடுத்து பத்திரிகையாளர் ஹாஜா முகைதீன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் நிலைகுலைந்துபோன ஹாஜா முகைதீனை உடைந்த பாட்டிலில் அந்த கும்பல் குத்தியுள்ளனர். சத்தம் அக்கம் பக்கத்தினர் வரவே அப்துல் பாசித் தலைமையிலான அந்த கும்பல் அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளனர்.
படுகாயமடைந்த பத்திரிகையாளர் ஹாஜா முகைதீன் உடனடியாக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஹாஜா முகைதீன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பத்திரிகையாளர் ஹாஜா முகைதீன் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய கும்பல் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, அந்த கும்பல் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஹாஜா முகைதீன் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கெலைவெறித் தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகிய அமைப்புகள் கண்டித்துள்ளன.
தாக்குதலுக்கு காரணமான நபர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யை இவ்வமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.