
கட்சிகளையே உடைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுப்பதும் தானாக விரும்பி இன்னொரு கட்சியில் சேர்வதும் சமம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியது இன்று வைரல் ஆகியுள்ளது.
சென்னையில் இன்று காலையில் முதலமைச்சர் விஜய்யைத் தலைமைச்செயலகத்தில் சிபிஎம் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகம், மேகமலை உட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை காலிசெய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைச் செயல்படுத்தக்கூடாது எனக் கோரியதாகவும் இனாம் வகை நிலங்களில் குடியிருக்கும், விவசாயம் செய்யும் மக்களைப் பாதுகாத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் கூறினார்.
அப்போது, டெல்லியில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதை எதிர்க்கிறீர்கள்; இங்கு மட்டும் அதைக் கண்டிக்காமல் இருக்கிறீர்களே எனச் செய்தியாளர் ஒருவர் கேட்க, “ கட்சிகளையே இரண்டு மூன்றாக உடைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுப்பதும் இங்கு அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பிரச்னையால் அவர்களாக வெளியேறி த.வெ.க.வில் சேர்வதும் சமம் அல்ல.” என்றார் சண்முகம்.
சிபிஐ கட்சி அமைச்சரவையில் சேர்வதாகக் கூறுவதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.