பாட்டிலுக்கு பத்து ரூபா... பிரச்சாரத்தில் பாட்டுப் பாடிய விஜய்!

பாட்டிலுக்கு பத்து ரூபா... பிரச்சாரத்தில் பாட்டுப் பாடிய விஜய்!
Published on

த.வெ.க. தலைவர் விஜய் மூன்றாவது வாரமாக இன்று சனிக்கிழமை நாமக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உள்ளூர்ப் பிரச்னைகளையும் தி.மு.க. சொல்லி நிறைவேற்றாத வாக்குறுதிகள் எனச் சிலவற்றையும் அவர் பட்டியலிட்டார். 

நாமக்கல்லில் விஜய்யின் பிரச்சாரத்துக்காக வந்திருந்த மக்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டனர். பதினைந்து பேருக்கும் மேல் மயக்கம் அடைந்து விழுந்தனர். சிலரை விஜய் கட்சியினர் அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

விஜய் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன் மணிமண்டபம் அமைப்பதாகக் கூறி, அதை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். 

நாமக்கல்லை அடுத்து, கரூருக்குச் சென்றவர், இரவு 7.15 மணியளவில் பேசத் தொடங்கினார். அவர் கண் முன்னால் சிறுமியும் பெண் ஒருவரும் மயங்கிவிழத் தொடங்கினர். அருகில் இருந்தவர்கள் அவருடைய முகத்துக்கு காற்று படும்படி கைக்குட்டைகளால் வீசினார்கள். 

சிலர் அவரைத் தாங்கிப்பிடித்தபடி தண்ணீர் தண்ணீர் எனக் கூச்சலிட்டனர். உடனே விஜய் தன் வாகனத்திலிருந்த தண்ணீர் குடுவைகளை வாங்கி அவர்களை நோக்கி வீசினார். விஜயுடன் மேடையில் இருந்த ஒருவரும் மேலும் பல தண்ணீர்க் குடுவைகளை வீசினார். அதைப் பிடித்து உயிர்போவதைப் போல பலரும் குடித்த காட்சி நேரலைகளில் அதிரவைத்தது. 

அவசர ஊர்திக்கு விஜய் அழைப்பு விடுக்க, அது பெரும் கூட்டத்துக்கு இடையே வருவதில் தாமதம் ஏற்பட்டது. 

சிறிது நேரத்திற்குள் விஜய் பேசத் தொடங்கினார். 

அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்துக்கு தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் சிலவற்றை நினைவூட்டினார். 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பற்றிக் குறைகூறியும், அண்மையில் கரூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழாவைக் கிண்டலாகவும் விஜய் குறிப்பிட்டார். 

பேச்சின் இடையே பாட்டிலுக்கு பத்து ரூபா என ஒரே வரியைப் பாட்டாக அவர் பாடியது த.வெ.க.வினரை உற்சாகமூட்டியது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com