பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் இனி மின்னூலகத்தில்!

பாரதியின் கைப்பிரதிகள் மின்னூலகத்தில்
பாரதியின் கைப்பிரதிகள் மின்னூலகத்தில்
Published on

மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகளைப் பார்வையிடும்வகையில் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தகவலநுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, அவரது நினைவு நாளை ஒட்டி, தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மின்னூலகத்துக்கான இணையதள முகவரி : (https://tamildigitallibrary.in)

’குயில்’, ‘சக்திப் பாடல்கள்’, ’சந்திரிகையின் கதை’, ‘விடுதலை’ உள்ளிட்ட பாரதியாரின் முக்கியப் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், 13 தொகுதிகளில் 462 பக்கங்களாக, இதில் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 17 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள மின்னூலகத்தில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பெற்றுள்ளன.

அண்மையில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டு, உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொலிகள், நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக உரு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களும், ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்தும் வகையில், பயனர் விருப்பத்தின் அடிப்படையில் தேடல் வசதி மற்றும் வகைப்படுத்துதல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரிய நூல்கள், ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு எழுத்தாளர் விவரம் உள்ளிட்ட குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் ஒரு தனித் தொகுப்பாகப் பதிவேற்றம் பெற்றுள்ளன.

மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மின் பதிப்பாக்கம் செய்யப்பெற்று பதிவேற்றம்பெற்றதில் பங்குவகித்த ஆய்வாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

பாரதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்த் துறை, வரலாற்றுத் துறை ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய தொகுப்பு இது.

logo
Andhimazhai
www.andhimazhai.com