சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப் பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி கோரியுள்ளார்.
”சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இரு வாரங்களுக்கு முன் திறக்கப்பட்ட எல் வடிவ மேம்பாலத்தின் தரம் குறித்து நான் வினா எழுப்பியிருந்த நிலையில், பாலத்தின் தரம் குறித்த அச்சம் அதிகரித்து, அப்பாலத்தில் பயணம் செய்வதையே வாகன ஓட்டிகள் தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது. லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலத்தைக் கூட தரமற்ற வகையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.” என இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் மத்திய பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி, இராஜிவ்காந்தி சாலை வரை மொத்தம் 652 மீட்டர் நீளத்திற்கு எல் வடிவத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை கடந்த 15&ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதற்கு அடுத்த சில நாள்களிலேயே, அதாவது கடந்த 18&ஆம் நாள் அந்த மேம்பாலத்தில் பயணம் செய்த நான், அப்பாலம் தரமற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதையும், அந்த பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அது உண்மை என்பதை ஒட்டுமொத்த சென்னையும் ஒப்புக்கொண்டுள்ளது.
மத்திய கைலாஷ் பாலம் பயணிப்பதற்கு சற்றும் பொருத்தமற்ற வகையில் இருப்பதாகவும், எல் வளைவு மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டிருப்பதாக இரு சக்கர ஊர்திகளில் சற்று வேகமாக செல்பவர்கள் கூட நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் எல் வடிவ மேம்பாலத்தை தவிர்த்து விட்டு, பாலத்திற்கு கீழ் சாலை வழியாகவே பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் எல் வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டதன் நோக்கமே படுதோல்வி அடைந்து விட்டதாக வல்லுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எல் வடிவ மேம்பாலம் தூக்கித் தூக்கிப் போடுவதற்கு 4 காரணங்களை வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவதாக, அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்கக் கூடிய பாலத்தைத் தாங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் போதிய வலுவற்றவையாக இருக்கக் கூடும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்படாததால், அவை விலகி வாகனங்கள் செல்லும் போது தூக்கிப் போடக்கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
இரண்டாவது பாலத்தைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் தரமற்றதாக இருக்கக்கூடும். வழக்கமாக பாலங்கள், மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த எம் 90 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்படும்; குறைந்தபட்ச வலிமையாவது பாலத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால், எம் 50 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், எல் வடிவ மேம்பாலம் கட்ட எம் 40 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட்டிருப்பது தான் பாலம் தரமற்றதாக இருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேற்கண்ட இரண்டில் எந்த காரணமாக இருந்தாலும், அது பாலத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்றும், பாலத்தின் அடிப்பக்கத்தில் இருந்து விரிசல்களும், வெடிப்புகளும் ஏற்படக் கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். பாலத்தின் மேற்பரப்பின் மீது கான்க்ரீட் கலவை சம அளவில் பரப்பப்படாதது, அதனால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் இதற்கு மூன்றாவது காரணமாக இருக்கலாம் என்றும், பாலத்தைத் தாங்குவதற்காக கட்டப்பட்டுள்ள தூண்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பது பாலத்தின் வலுவற்றத் தன்மைக்கு நான்காவது காரணமாக இருக்கக்கூடும் என்றும் கட்டுமான வல்லுனர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேற்கண்ட அம்சங்கள் அனைத்தும் மத்திய கைலாஷ் எல் வடிவப் பாலத்தின் கட்டுமானத்தில் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதையே காட்டுகின்றன. தமிழ்நாட்டில் ஊழலில் சாதனை படைக்கும் துறைகளில் முன்னணியில் இருப்பது நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை தான். பொதுப்பணித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் மூன்றே மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதற்கு காரணம் பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தான். ஆனால், அதற்கு காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை.
நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை ரூ.700 கோடி குறைவாக செய்வதற்கு ஒரு நிறுவனம் முன்வந்த நிலையில், அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்டு, ரூ.2,100 கோடியில் செய்வதாகக் கூறிய நிறுவனத்திற்கு திமுக அரசு ஒப்பந்தம் வழங்குகிறது என்றால், நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அனைத்து ஒப்பந்தப் பணிகளிலும் நடைபெறும் ஊழலை விட எல் வடிவ மேம்பாலம் அமைப்பதில் கூடுதலாக ஊழல் நடந்ததன் விளைவு தான் அந்தப் பாலம் அவ்வளவு மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்; ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.