தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17இல் தாக்கல்செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இதைக் கூறினார்.
சட்டப்பேரவையின் விதி 26/1ன்படி, அடுத்த கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டியுள்ளதாகவும் அதே நாளில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் இடைக்கால நிதிநிலை அறிக்கை வாசித்து அளிக்கப்படும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.
அடுத்து 20ஆம் தேதியன்று முன்பண மானியக் கோரிக்கைகளும், நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களும் சட்டப்பேரவையில் வாசித்தளிக்கப்படும்.
எத்தனை நாள்கள் அவை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழுதான் தீர்மானிக்கும் என்றும் முடிந்த அளவு நேரலையாகவே தற்போது அவை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
கேள்வி நேரம், அமைச்சர்களின் பதிலுரைகள், சிறப்புத் தீர்மானங்கள் ஆகியவை இதுவரை நேரலையாகத்தான் வந்துகொண்டிருக்கின்றன என்றார் அப்பாவு.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகையில் துண்டிக்கப்படுகிறதே எனக் கூறப்படுகிறதே எனக் கேட்டதற்கு, நாடாளுமன்றத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்று அப்பாவு கூறினார்.