மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி

பிரதமருக்குத் தோல்வி பயம்; அதனால்தான் முகத்தில் கோபம் : மு.க.ஸ்டாலின்

தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார் என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காட்டமாகக் கூறியுள்ளார்.

நாளை அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித வடிவ அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

அந்தக் கடிதத்திலிருந்து...

“ இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இந்தியா’ கூட்டணி வென்றிட வேண்டும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயகக் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், தி.மு.க. அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர்.

அவர் கொண்டுவந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடத்தைத் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.

நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம்.

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம்.

ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக்கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.

அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்.

பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com