பிரதமர் மோடி தமிழர்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்படுவதாகக் கண்டித்து, அவருடைய வருகைக்கு எதிராக மே பதினேழு இயக்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னை, தியாகராயர் நகரில் பெரியார் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
தமிழுக்கு முக்கியத்துவம் தருவதாகக் கூறும் மோடியின் வருகையைப் பற்றி வரும் தொலைபேசித் தகவலில்கூட இந்தி இருக்கிறது என்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கமுடியாத மோடி திரும்பிப் போகவேண்டும் என்றும் கீழடி முடிவை மாற்றத் துடிக்கும் மோடி அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும் பா.ஜ.க.வுக்குத் துணைபோகும் தமிழக கட்சிகள் கண்டனத்துக்கு உரியன என்றும் அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகவும் தமிழ், தமிழர், தமிழ்நாட்டுக்கு பகையாகச் செயல்படுவதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.