தமிழகத்தின் சமகால அரசியல் யூட்டியூபரான கரிகாலன் தொழில் நெறிமீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், அவர் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் சென்னை, உயர்நீதிமன்றத்தையொட்டி மூத்த செய்தியாளர் சுப்பையா செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வழக்குரைஞர் ஒருவரிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் அவர் பேட்டி கண்டார்.
அந்தப் பேட்டியின்போது தனிநபர் யூட்டியூப் ஊடகத்தைச் சேர்ந்த கரிகாலன் குறுக்கிட்டது, சுப்பையாவின் வேலைக்கு இடையூறாக அமைந்தது. ஆனாலும் அவரிடம் கரிகாலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதை தன்னுடைய யூட்டியூபிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டார்.
இந்தக் காட்சி சமூக ஊடக இரசிகர்களிடம் கணிசமாகப் பரவியது. சுப்பையாவுக்கு ஆதரவாக செய்தி ஊடகத்தினரும், கரிகாலனுக்கு ஆதரவாக குறிப்பிட்ட அரசியல் தரப்பினரும் சமூக ஊடகங்களில் வாதிட்டபடி இருந்தனர்.
அந்த வாக்குவாதத்தின்போது, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினர் அட்டை தன்னிடம் இருப்பதாக கரிகாலன் குறிப்பிட்டதையும் அவருடைய ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர். அந்த அட்டையை வைத்துக்கொண்டு சக மூத்த செய்தியாளரிடம் வம்பு செய்யலாமா என செய்தி ஊடகத்தினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 16ஆம் தேதி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கரிகாலனின் அத்துமீறிய செய்கையைக் கவலையோடு எழுப்பிய ஊடகத்தவர் சிலர், அவரை மன்றத்திலிருந்து நீக்கிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில், பெரும்பான்மையோர் ஆதரவு இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கரிகாலன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அவ்வமைப்பின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் அசீப் ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.