
திமுக அரசின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு ஏமாற்று வேலை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்ப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் 2002-03ஆம் ஆண்டுடன் ரத்து செய்யப் பட்டு, 2004 ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
இத்தகைய சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தான் இந்த அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்பதை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.
பழைய ஓய்வூதியத்துடன் ஓப்பிடும் போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு; பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல அம்சங்கள் தெளிவற்று உள்ளன. அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இத்தகைய தெளிவற்றை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் எவ்வளவு? என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மாறியிருக்கும் இன்றைய சூழலில் ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு 30 வயதிற்கும் மேலாகும் நிலையில், அவர்கள் 30 ஆண்டுகள் பணி செய்வது என்பது சாத்தியமற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன் அளவு குறித்து எந்த விளக்கமும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
வழக்கமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 30 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியமும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களுக்கு கால அளவிற்கு ஏற்ற வகையிலும் ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டப்படி 30 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்பதும், அதன் அளவை குறிப்பிடாததும் பெரும் அநீதி.
அதேபோல், 2003&ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பணியில் சேர்ந்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு எவ்வளவு? என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்காமல் கருணை ஓய்வூதியம் வழங்குவதாக அறிவிப்பது அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி சிறுமைப்படுத்தும் செயலும் ஆகும்.
இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓய்வூதிய நிதியத்திற்கு அரசு ரூ.13,000 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்தத் தொகையை, இன்னும் 45 நாள்களில் முடங்கவிருக்கும் திமுக அரசு, எப்போது, எப்படி செலுத்தும்? என்பது தொடர்பாக எந்த விளக்கமும் திமுக அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும் போது தான் தெளிவாகத் தெரியும். அத்தகைய அரசாணை வெளியாகும் போது அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதற்கான 30 ஆண்டுகள் பணி செய்ய வாய்ப்பில்லாதவர்களும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்; அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று கூறியுள்ள அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள், அப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஓட்டைகள் நிறைந்த இத்திட்டத்தை அரசு அறிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுக அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், 56 மாதங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு, பதவிக்காலம் முடிவடைவதற்கு 56 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பது சதி மட்டும் தான். இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம்; நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறி வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இப்படி ஒரு ஏமாற்று வேலையை திமுக அரசு செய்கிறது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.