புது சிப்காட் மூலம் நச்சு- கடலூர் மாவட்டம் மீது ஏன் வன்மம்?

கடலூர் விவசாயிகள் போராட்டம்
கடலூர் விவசாயிகள் போராட்டம்(பழைய படம்)
Published on

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையிலுமான திட்டங்கள்  காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டால், ‘‘நானும் டெல்டாக்காரன்’’ என்றும், மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டால்,‘‘உங்களுக்காக முதல்வர் பதவியையே தூக்கி எறிவேன்’’ என்று முழக்கமிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மாவட்டத்தில் மட்டும் மத்திய அரசின் சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப் படுவதை வேடிக்கைப் பார்ப்பதுடன், மாநில அரசின் சார்பிலும் நச்சுத் திட்டங்களை செயல்படுத்துவது ஏன்? கடலூர் மாவட்டத்தின் மீதும், அங்குள்ள மக்கள் மீதும் முதலமைச்சருக்கு அப்படி என்ன வன்மம் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

அறிக்கை ஒன்றில் இன்று இவ்வாறு கேட்டுள்ள அவர், ”கடலூர் மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி வாழத்தகுதியற்ற பகுதியாக மாறி வரும் நிலையில், அங்கு 1119 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு சிப்காட் வளாகத்தை அமைப்பதற்காக விளைநிலங்களை பறிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடலூர் மக்களை வாழவே விடக்கூடாது என்ற நோக்குடன் வாழ்வாதாரப் பறிப்பு, நச்சுச் சூழலை உருவாக்குவது என இரட்டைத் தாக்குதலை நடத்துவது கண்டிக்கத்தக்கது.” என்றும் காட்டமாகக் கூறியுள்ளார். 

”தமிழ்நாட்டில் ஓரகடம், செய்யாறு ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் 2625 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. முழுக்க, முழுக்க வேதிப்பொருள்களை உற்பத்தி செய்யும் இந்த தொழிற்பேட்டையால் அந்தப் பகுதியே நச்சுக்காடாக மாறி வரும் நிலையில், கடலூர் சிப்காட்டை ஒட்டிய குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க திமுக அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்காக அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான அரசாணையை கடந்த மாதம் 28&ஆம் தேதி பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை தான் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

குடிக்காடு, தியாகவல்லி முதலிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் உண்மையாகும். அதையும் தாண்டி, குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம்  மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.

குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் கூடுதலாக இன்னொரு சிப்காட் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமானவையாகும். கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், இங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன.

இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள  நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களாலும், நிலக்கரி சாம்பல் பறப்பதாலும் விவசாயமும், மனிதர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். என்.எல்.சி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்குப் பிறகு மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாக கடலூர் உருவெடுத்திருக்கும் நிலையில், அதை மேலும், மேலும் நச்சுக் காடாக்கும் வகையில் 1119 ஏக்கரில் சிப்காட் வளாகம் அமைக்கத் துடிப்பதை ஏற்கவோ, மன்னிக்கவோ முடியாது.

புதிய சிப்காட் வளாகம்  அமைக்க நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக எப்போது அறிவிப்பு வெளியானதோ, அப்போதிலிருந்தே இதற்கு உள்ளூர் பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி சில நாள்களுக்கு முன் நொச்சிக்காடு பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் குழு சென்றதால் மக்களிடம் அச்சம் அதிகரித்திருக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசு நடத்தும் இத்தகைய அத்துமீறலை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com