பெஞ்சல் புயல் நிவாரணத்துக்காக துணைமுதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மைய அரசிடம் கேட்ட நிவாரணம் அளிக்கப்படவில்லை என மக்களவைவரை பிரச்னை நீடித்துவருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்திடம் கடந்த 5ஆம் தேதி நிவாரணத்துக்காக வழங்கினார்.
அதையடுத்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அறிவுறுத்தினார். அதன்படி, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்து அவர்களின் மாத ஊதியம் ரூ.1.3 கோடியை புயல் நிவாரணத்துக்குக் கொடுத்துள்ளனர்.