புயல் பாதித்த பகுதிகளில் பா.ஜ.க.வின் வங்கதேச மதப் போராட்டம்!

பா.ஜ.க. போராட்டத்தில் கைதான தமிழிசை
பா.ஜ.க. போராட்டத்தில் கைதான தமிழிசை
Published on

வங்கதேசத்தில் இந்து மதத்தினர் தாக்கப்படுவதைக் கண்டிப்பதாகக் கூறி பா.ஜ.க. இன்று நாடளவில் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட பல மாவட்டங்களில் அக்கட்சியினர் முயன்றனர். ஆனால் காவல்துறை முன்கூட்டியே இதற்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், தடையை மீறிய அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

தலைநகர் சென்னையில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை, துணைத்தலைவர் கரு.நாகராஜன் முதலியவர்கள் கலந்துகொண்டனர்.

கோவை, சிவானந்தா காலனியில் எச். இராஜா தலைமையில் ஆர்ப்பாட்ட முயற்சி நடைபெற்றது. 

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியிலும் பா.ஜ.க.வின் ஆர்ப்பாட்ட முயற்சி நடைபெற்றது. தடையை மீறிய முன்னாள் மைய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் காந்தி முதலியவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

பா.ஜ.க.வினர் கைதுக்கு அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில், “ வங்கதேச நாட்டில், ஹிந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வங்கதேச அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமைதியான முறையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு, அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ள நிலையில், திமுக அரசு மட்டும் அனுமதி வழங்க மறுத்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பொதுமக்களையும், மூத்த தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்திருக்கிறது. வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஹிந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது, ஜனநாயக உரிமை. இதனை முடக்க நினைக்கும் திமுகவின் போக்கு, மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com