பேரா. வேங்கடாசலபதிக்கு தலைவர்கள் வாழ்த்து!

பேரா. வேங்கடாசலபதிக்கு தலைவர்கள் வாழ்த்து!
Published on

ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு
சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டதற்காக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

”நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக “Swadeshi Steam” நூலை திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் சாகித்ய அகாதெமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!

கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்!”

சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து!

”2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பேராசியர் வெங்கடாசலபதி அவர்களுக்கு சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவின் முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும், சுதேசி சிந்தனையின் அடையாளமும் ஆன வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியவர் வேங்கடாசலபதி. தனது ஆய்வுகளின் வழியாக, வ.உ.சி புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்ற தீராத தாகம் கொண்ட அவர், தனது ஆய்வு நூலுக்காக பெற்றிருக்கும் இந்த விருதின் மூலம் வ.உ.சியின் வரலாறு மேலும் பரவலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் அவருடைய 40 ஆண்டுகால ஆய்வுப் பணிக்கு இந்த விருது மதிப்பு சேர்த்துள்ளது. எடுத்துக் கொண்ட பணியை மென்மேலும் ஊக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழுவின் சார்பில் வாழ்த்துகிறோம்.” என்று பாலகிருஷ்ணனின் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com