தமிழ் நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில விதிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும், அலைக்கழிப்பவையாகவும் அமைந்துள்ளன; எனவே, தமிழக அரசு தலையிட்டு, பொருத்தமான முறையில் மாற்றியமைப்பதுடன், காலியிடங்களை விரைந்து நிரப்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ் நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்களின் மூலம் கல்லூரிகள் நடந்துவரும் நிலையில் இப்படியான அறிவிப்பு நம்பிக்கையளிப்பதாகும். ஆனால், புதிய அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ள புதிய நடைமுறைகள், விண்ணப்பம் செய்வதையே சிக்கலாக்குகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வலியுறுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் (2018 மற்றும் 2023) அறிவிக்கையின்படி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது முனைவர் பட்ட தேர்ச்சி இருந்தால் போதும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம், புதிதாக எழுத்துத் தேர்வை புகுத்துவது தேவையற்றதாகும். விண்ணப்பத்தின் அடிப்படையில் மதிப்பெண் மற்றும் வகுப்புவாரியாக தரவரிசை தயார் செய்யப்பட்டு, சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகளின் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்துவதே சரியாக இருக்கும்.” என்றும்,
”அதே போல, பணிக்கு தகுதியான ஒருவர் விண்ணப்பம் செய்யும்போதே கொடுக்க வேண்டிய கட்டாய ஆவணங்களில், கல்வித் தகுதிகளுக்கு இணையாக கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் இருந்து நடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate) மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடமிருந்து நற்பண்பு சான்றிதழ் (Character Certificate from a Gazatted Officer) கேட்கப்படுகிறது. இது நடைமுறை சாத்தியமற்றது ஆகும். அதிலும், விண்ணப்பம் செய்வோருக்கு அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயித்துவிட்டு அவர் படித்த ஒவ்வொரு இடத்திலும் நடத்தை மற்றும் நற்பண்புச்சான்றிதழ் வாங்க நிர்ப்பந்திப்பது துன்புறுத்தலாக அமையும். எனவே, அனுபவச் சான்றுடன் விண்ணப்பிக்கும்படி விதியை தளர்த்தி அறிவிக்கலாம். முனைவர் பட்டம் படித்து ஏற்கனவே பல தனியார் கல்வி நிறுவனங்களில் பணியில் இருக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியரை இனம் காண அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் பற்றிய விதிகளை சேர்ப்பது உதவி செய்திடும்.
அவ்வாறே, தமிழ் வழி படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தகுதியில், முதுகலை படிப்பு வரையில் தமிழை பயிற்று மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியில் படிப்பு சார்ந்த தளர்வுகள் தேவைப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 4.10.2019, 14.03.2024 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிவிக்கைகளை தொடர்ந்து, பலரும் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். ஆனால், அதன் மூலம் நியமனங்கள் நடக்கவில்லை. ஆகவே, தற்போதைய அறிவிப்பாணையில் உரிய திருத்தங்கள் செய்வதுடன், இம்முறை காலதாமதம் இன்றி நியமனங்கள் நடந்தேறுவதை உறுதி வேண்டும்.” என்றும் சண்முகம் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.