பொங்கல்
பொங்கல்

பொங்கல் வாழ்த்து - கட்சித் தலைவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருவிழாவுக்கான வாழ்த்துகளை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். 

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற உன்னத உணர்வை இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு மேலாக பின்பற்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் தாய் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூணுவோம்!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சமூகநீதியைப் பாதுகாக்கும் பணியில் ஜனநாயகத்தைக் காக்கும் புத்துணர்ச்சி புது வெள்ளமாய் நாடு முழுவதும் பொங்கட்டும்!
திராவிடர் திருநாளாக, உழைப்பின் பெருமிதத்தை உலகுக்கு உணர்த்திடும் இப்பொங்கல் திருநாளில் ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதியைப் பாதுகாக்கும் பணியில் ஜனநாயகத்தைக் காக்கும் புத்துணர்ச்சி புதுவெள்ளமாய் நாடு முழுவதும் பொங்கட்டும்! மக்களின் மகிழ்ச்சி எங்கும், என்றும் தங்கட்டும்! ‘‘பொங்கலோ பொங்கல்'' என்று அனைவருக்கும் பொங்கல் புத்தாண்டாக மலரட்டும், வாழ்த்துகள்!

பா.ம.க. நிறுவனர் இராமதாசு

இயற்கையை வழிபடும் தமிழர்களின் முதன்மைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துகள். மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நடவடிக்கைகள் தேங்கிக் கிடக்கின்றன; சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயம் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினாலும், அரசின் காதுகளில் அது விழவில்லை; வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி  காட்டி இரு ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வார்த்தை அளவில் சமூகநீதி பேசும் ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. இந்தத் தடைகளையெல்லாம் தைத் திருநாள் தகர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்  என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அது நிச்சயம் நிறைவேறும்.

காங்கிரஸ் கட்சி தமிழகத் தலைவர் அழகிரி

நாகரீக வளர்ச்சியில் கலாச்சாரத்தின் தாக்கம் மற்றக் கலாச்சாரங்களின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால், பொங்கல் பண்டிகை என்பது மற்றைய கலாச்சாரத்தை தம்முடன் இணைத்துக் கொண்டு மேன்மேலும் சிறப்புப் பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் உள்ளது.

‘உழவே தலை” என வாழ்ந்த உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா

அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வாழ்த்துகள்.

சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

ஆடிப் பட்டம் தேடி விதைத்து, கண்ணிமைகள் கருவிழிகளை காப்பது போல். பாதுகாத்து, வளர்த்த பயிர்கள் விளைந்து, பலன் வழங்கி நம்பிக்கையூட்டும் காலமான தை மாதத்தை, தமிழ் சமூகம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது.

மார்கழி மாத நிறைவில் பழையன கழித்து, புதியன சேர்த்துக் கொள்வதையும் ஒரு மரபாக பின்பற்றி வருவதை “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்கிறது நன்னூல்.

உழைப்புக்கு உதவிடும் கால்நடைகளையும் , உழுவடை கருவிகளையும் வணங்கி வழிபட்டு கொண்டாடுவது இன்று மரபு வழி பண்பாட்டு நிகழ்வாகி விட்டது.

அறிவியல் வளர்ச்சி அற்புதங்களை அரங்கேற்றி வருகிறது. உள்ளங்கையில் உலக நடப்புகளை மேற்பார்வை செய்யும் இணைய வலைத் தொடர்பு ஆண்ட்ராய்டு அலைபேசி கருவியால் சாத்தியமாகிவிட்டது.

இன்று செயற்கை நுண்ணறி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.

சந்திரனின் தென் துருவத்தில் குறிப்பிட்ட இலக்கில் ஆய்வுக் கலம் இறக்கி உலக கவனத்தை ஈர்த்த சாதனையில் தமிழர் அறிவு மேலாண்மை பெருமை பெற்று நிற்கிறது. சூரியக் கோள் குறித்த ஆய்வுக்கும் ஒரு கலம் அனுப்பி, அதன் இலக்கில் நிறுத்திய இமாலய சாதனையும் அண்மையில் நிறைவேறியது.

ஆனாலும், நாட்டு மக்களில் 35 சதவீதம் பேர் அதீத வறுமையில், அதாவது ஒரு வேளை உணவுக்கும் போராடும் பசியும், பட்டினியுமான வாழ்வின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாத காலத்தில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு இரண்டிலக்கம் தாண்டி செல்கிறது. வேலையின்மை அதிகரித்து வெடிக்கும் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிறது.

உழவின் சிறப்புப் பேசும் சமூகத்தில் உழவர்களும், வேளாண் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் தொடர்கிறது.

“தாயின் வயிறு பசியில் துடிக்கும் போது பிள்ளை கோயிலில் ‘கேர’ தானம் செய்து கொண்டிருந்தானாம்” என்பது போல் நாட்டின் பிரதமர் மக்கள் வாழ்க்கை நெருக்கடிகள் மீது கவனம் செலுத்தாமல் இதிகாச நாயகன் ராமர் கோயில் குட முழுக்கு நடத்துவதில் மூழ்கி கிடக்கிறார்.

இயற்கை சீற்றங்களை வென்று வாழ இயற்கையோடு இணைந்து இயற்கையை வெல்வது என்பதை தவிர வேறு பாதை நமக்கு இதுவரை தெரியவில்லை. மிக் ஜாம் புயலும், தென் தமிழகத்தில் பெய்த பெரு மழையும் தலைநகர் உட்பட எட்டு, ஒன்பது மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. சுமார் 2 கோடி மக்களின் மறுவாழ்வுக்கு தமிழ்நாடு அரசு போர்கால முனைப்பில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாதியும், மதமும் அரசியல் களத்தில் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மனித மாண்பு அழித்தொழிக்கும் சக்தியில் அரசு அதிகாரத்தின் துணையோடு ‘ஆக்டோபஸ்’ போல் எட்டு திசைகளிலும் கை விரித்து ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து வருகிறது.

விழித்தெழுவோம். நாடு தனிநபர் மையப்பட்ட நவீன பாசிச, மதப் பெரும்பான்மை சர்வாதிகாரமாக உருமாற அனுமதிக்க மாட்டோம் என தை முதல் நாள், தமிழர் திருநாள் மற்றும் உழவர் இனத்தில் உறுதி ஏற்போம்.

நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத மதவெறி சக்திகளை நிராகரித்து, ஜனநாயகம் , நல்லிணக்கம் பேணும் சக்திகளை, சமூகத்தின் அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி காணும் மாற்று கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்திடுவோம்.

சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்.

தமிழ் மக்களின் தனிச் சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக, கொண்டாடப்படுகிற பொங்கல் திருநாள், சாதி-மத வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து இயற்கையை போற்றுகிற, உழைப்பின் உன்னதத்தை உயர்த்திப் பிடிக்கிற சிறப்புமிக்க பண்டிகை நன்னாளில், மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம்.

இந்த ஆண்டு பொங்கல் விழா, முந்தைய ஆண்டுகளைவிட தனிச் சிறப்புமிக்கது என்று குறிப்பிடலாம். ஏனென்றால், தமிழ் மக்களின் பண்பாடுகள் உட்பட நாட்டின் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட மக்களின் வெவ்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பன்முக இந்தியாவின் பண்புகளை மறுத்து, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி என இந்திய திருநாட்டை ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர துடிக்கும் பாஜக தலைமையிலான மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு, சபதம் ஏற்கிற, அதற்கான வியூகங்களை துவக்குகிற திருநாள் இந்தப் பொங்கல் பண்டிகை என்றால் மிகையல்ல.

நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைத்துள்ள இந்தியா எனும் அணி சேர்க்கையின் வெற்றிப் பயணம் துவங்குகிற நன்னாளாக; அதன்மூலம் 2024 தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வலுப்பட; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட; மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம்!

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ

தமிழர் திருநாள், திராவிடர் திருநாள், பொங்கல் திருநாள் என்றெல்லாம் தமிழ் மக்களால் விழா எடுத்துக் கொண்டாடப் படுகிற உழவர் திருநாள் தமிழ் மக்களின் தொன்மையான விழாவாகும்.

பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு திராவிட இயக்கமே முதன்மையான காரணமாகும்.

தலைநகர் சென்னையிலும், தென்தமிழ்நாட்டிலும் பெருமழை - வெள்ளம் காரணமாக நம் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், இழப்புக்கள் ஏராளம்! ஏராளம்!!

ஆண்டுதோறும் ஊர்த் திருவிழாவாக உவப்புடன் கொண்டாடப்படும் கலிங்கப்பட்டி தமிழர் திருநாள் விழாவை இதன் காரணமாகவே நிறுத்தி வைத்துவிட்டோம்.

ஆனாலும்கூட, தமிழரின் பண்பாட்டுப் பெருமைமிகு அல்லவா இந்தப் பொங்கல் விழா! அந்த விழாவை வழமை போல விழா எடுத்துக் கொண்டாடி மகிழுங்கள். ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழக்கம் போல வழங்கிடுங்கள். இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி மகிழுங்கள்.

பொங்கல் விழாவினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது. பேரறிஞர் அண்ணா உயிர்நிகர் இலட்சியங்களான மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து வரும் மோடி தலைமையிலான மக்கள் விரோத பா.ஜ.க. தன் ஆட்சியைத் தக்கவைக்க மீண்டும் களத்தில் நிற்கிறது.

திராவிட மாடல் ஆட்சியினை திறம்பட நடத்தி வரும் திமுகழகத்துடன் இந்தியா கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்திற்காக நாடு தழுவிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் பொங்கல் விழாவினை நாம் கொண்டாட இருக்கிறோம்.

பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்திடும் அதே வேளையில், ஆட்சி மாற்றத்திற்காகவும், நாம் சூளுரைப்போம்!

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன்

தமிழ்நாடு, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

தமிழகத்தின் வரலாற்றுப்பூர்வமான ஒரே விழா பொங்கல் திருவிழாவாகும். ஆதி காலத்துத் தமிழர்கள் கவுதம புத்தரின் நினைவுநாளான இந்நாளில் போகித் திருநாளாகக் கொண்டாடி வந்தனர்.

ஆண்டு முழுவதும்  அவ்வப்போது பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடினாலும் 'தமிழர் திருநாள்'  என அழைக்கப்படும் ஒரே பண்டிகை பொங்கல் விழா மட்டுமே. புராணக் கதைகளின் பின்னணி ஏதுமில்லாமல் உழைப்பையும் உறவையும்  மட்டுமே அடிப்படையாகக் கொண்டு காலம் காலமாகக் கொண்டாடப்பட்டுவரும் உன்னதத் திருவிழா.

உழைப்பைப் போற்றும் திருவிழாதான் தமிழர்கள் போற்றும் தமிழினத்தின் பொங்கல் திருவிழாவாகும். இந்நாளில், நடைபெறவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை  வீழ்த்தி சனநாயகத்தை வென்றெடுக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் உறுதியேற்போம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன்

இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவர் என்ற வேறுபாடின்றி, ஒரே இனம்; அது தமிழினம் என்ற அடிப்படையில், தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு இருக்கிறோம்.

ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், திருவள்ளுவர், திருமூலம், வள்ளலார் வழியில் நின்று, பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதன்படி, தை வந்தால் நமக்கு ஒரு பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றுவோம்.

நம் இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும்.

முக்கியமாக, தமிழ்த்தேசியச் சிந்தனைக் கூறுகளைச் சிதறிய அறிஞர் அயோத்திதாச பண்டிதர், இனம் – மொழி – நாடு குறித்த விடுதலைக் கருத்தியல் கருவூலங்களை அள்ளிக்கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆரியத்தின் வாயில் இருந்து தமிழ்மொழியை மீட்கத் தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழ்ச் சான்றோர்கள் என ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்த் தேசியக் களத்திலே நின்று தமிழினம் சமராடியது. இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டியது தமிழர்தம் வரலாற்றுக் கடமை; தவிர்க்கவியலா வரலாற்றுக் கடமை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com