பொதுக்கூட்டம் நடத்த ரூ.20 லட்சமா... என்னா இது?- அன்புமணி டென்சன்!

அன்புமணி
அன்புமணி
Published on

”தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நடத்தும் 5 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் விதிகள் வகுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது; அரசியலை வணிகமயமாக்க வகை செய்யும் இந்த முன்மொழிவை திமுக அரசு கைவிட வேண்டும்.” என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த யோசனையை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களையும்,  பேரணிகளையும் நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும். அத்தகைய நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும். அதற்காக வைப்புத்  தொகை செலுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது.” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

”அரசியல் கட்சிகள் அவற்றின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல பொதுக்கூட்டங்கள் தான் ஒரே வழியாகும். பெரும்பாலான சிறிய கட்சிகள் நன்கொடை வசூலித்து தான் கூட்டங்களை நடத்துகின்றன. அவர்கள் வைப்புத் தொகை  செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டால், அவற்றை அக்கட்சிகளால் நிறைவேற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொள்ளையடித்த கட்சிகள் மட்டும் தான் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த முடியும் என்ற நிலை உருவாகி விடும். இது அரசியலை வணிகமயமாக்கி விடும் என்பது மட்டுமின்றி ஜனநாயகத்துக்கே ஆபத்தாக முடிந்து விடும்.

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வைப்புத்தொகை பெறலாம் என உயர்நீதிமன்றம் தான் பரிந்துரைத்தாகக் கூறி நீதித்துறை மீது அரசு பழிபோடக்கூடாது.  உயர்நீதிமன்றம் தெரிவித்தது யோசனை மட்டும் தான். ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமை கொண்ட அரசுக்கு இந்த  யோசனையை நிராகரிக்க அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆனால், வணிக அரசியல் நடத்தும் திமுக, அதைப் போன்ற கட்சிகள் மட்டும் பொதுக்கூட்டங்களை நடத்தினால் போதும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறது.

தந்தை பெரியார் காலத்திலும், அறிஞர் அண்ணா காலத்திலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கட்டணம் வசூலிக்கப்பட்ட வரலாறும், பொதுக்கூட்டங்களில் நன்கொடை திரட்டப்பட்ட முன்னுதாரங்களும் உண்டு.  ஜனநாயக வழியிலும், நேர்மையாகவும் இயங்கும் கட்சிகள் அப்படித் தான் செயல்பட முடியும். மாறாக ஆளும்கட்சியான திமுக அதன் கணக்கில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறது என்பதற்காக, மற்ற கட்சிகளின் நிலைமையையும்  அதே அளவுகோலைக் கொண்டு அளக்கக் கூடாது.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்ற திமுக அரசின் யோசனையை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்காது. அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து  தண்டம் வசூலிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள நிலையில், வைப்புத்தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. எனவே, வைப்புத்தொகை குறித்த முன்மொழிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, பொதுக்கூட்டங்களில் விதிகளும்,  ஒழுங்கும், கட்டுப்பாடும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.” என்றும் அன்புமணி கூறியிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com