மக்களின் பணத்தை அரசு அதிகாரிகளுக்காக வாரி இறைப்பதா?

மக்களின் பணத்தை அரசு அதிகாரிகளுக்காக வாரி இறைப்பதா?
Published on

மக்கள் வரிப்பணத்தை அரசு அதிகாரிகளுக்கு வாரி இறைக்கும் திமுக அரசு என்றும் டாப்ஸ் ஓய்வூதியத் திட்டத்தால் தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆபத்தான நிதிச்சுமை என்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் விமர்சித்துள்ளது.

அதன் பொதுச்செயலாளர் ஆ.ஜெய்கணேஷ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.                    

“தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 2024–25 மற்றும் 2025–26 நிதிநிலை அறிக்கைகள் (Budget Citizen’s Guide) காட்டும் உண்மை ஒன்று தான் – மாநில நிதி நிலை இன்று மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளது. இன்று அரசு கஜானா திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அரசியல் லாபத்திற்காக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அறிவிக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் நிதி மேலாண்மையையும் சமூக நீதியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

” 2024–25 பட்ஜெட்: சம்பளம் – ஓய்வூதியம் ஏற்கனவே மிகப் பெரிய சுமை

மொத்த வருவாய் செலவீடு (Revenue Expenditure): ₹3,48,289 கோடியாகும்

சம்பளச் செலவு : ₹84,932 கோடி

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுபெறல் பலன்கள் : ₹34,722 கோடி


சம்பளம் + ஓய்வூதியம் = ₹1,22,596 கோடி. 

இது மொத்த வருவாய் செலவீட்டில் சுமார் 44% ஆகும்.

மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue – SOTR) சுமார் 62% ஆகும். பெரும்பங்கு அரசு ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுகிறது.


2025–26 பட்ஜெட் மதிப்பீட்டின் படி,

சம்பளச் செலவு : ₹90,464 கோடி

ஓய்வூதியம் & ஓய்வுபெறல் பலன்கள் : ₹41,290 கோடி

சம்பளம் + ஓய்வூதியம் = ₹1,31,754 கோடி.

இந்த நிலைமைக்கிடையில், TAPS மூலம், வருடத்திற்கு அரசுக்கு கூடுதல் செலவாக ₹13,000 கோடி.

இதனால், மொத்த சுமை = ₹1,44,754 கோடி

மாநில சொந்த வரி வருவாயில் சுமார் 65% ! மொத்த வருவாய் செலவீட்டில் சுமார் 44%! 

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படும் நிலை. அடுத்தடுத்து வரும் வருடங்களில் உயர வாய்ப்பு உள்ளது.

TAPS செலவை யார் ஏற்கப் போகிறார்கள்?

முதலமைச்சர் “TAPS-க்கு கொண்டு வருவதற்கு மொத்த தேவையான ₹13,000 கோடியை அரசு ஏற்றுக்கொள்ளும்” என்று அறிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் வசூலிக்கப்படும் பணமே. இந்த நிதிச் சுமையை சரிகட்ட ஒன்று தமிழக மக்கள் மீதான வரி அதிகரிக்கப்படும் இல்லையென்றால் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளுக்கான பணம் இதற்காக செலவிடப்படும் எப்படி பார்த்தாலும் மக்களுக்கு மிகப்பெரும் சுமையாகவே இந்த புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இருக்கப்போகிறது. 

TAPS காரணமாக,ஒரு தமிழ்நாட்டு குடிமகன் ஆண்டுக்கு சுமார் ₹1,530.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆண்டுக்கு சுமார் ₹6,120 கூடுதல் வரிச்சுமையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மிகச்சரியாக சொல்ல வேண்டுமானால் 2% மக்களுக்காக 98% மக்களின் உழைப்பு காற்றில் பறக்கவிடப்படுகிறது?!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2% மட்டுமே. ஆனால்,20 லட்சம் அரசு ஊழியர்களுக்காக,8.5 கோடி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது.


இது சமூக நீதியா?

அல்லது சமூக பொருளாதார நீதியா?

அல்லது அரசியல் சமரசமா?

ஓய்வூதியத்தின் அடிப்படை நோக்கம் மறக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தின் நோக்கம்:

ஓய்வூதியம் என்பது ஒரு அரசு அதிகாரி அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மரியாதையான வாழ்க்கை வாழாத்தானேயொழிய செல்வம் சேர்க்க அல்ல.

வளர்ந்த நாடுகளில் அரசு  அதிகாரிகளுக்கென்ற தனி ஓய்வூதியம் கிடையாது.

அனைத்து முதியவர்களுக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அடிப்படையான ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது . 

ஆனால் TAPS, ஓய்வூதியத்தை சமூக பாதுகாப்பு திட்டமாக அல்ல, தேர்தல் அரசியலுக்கான வாக்குறுதியாக மாற்றுகிறது. 

இதனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆபத்து. தமிழ்நாடு அரசு ஏற்கனவே, கல்வி,சுகாதாரம்,ஊட்டச்சத்து,வேலைவாய்ப்பு,கிராம & நகர்ப்புற மேம்பாடு

போன்ற துறைகளுக்கு நிதி தேவைப்படும் நிலையில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில்,மேலும் ₹13,000 கோடி ஓய்வூதியச் சுமை

எதிர்காலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக பாதிக்கும்.


JACTTO–GEO நியாமில்லாத கோரிக்கை போராட்டம்:

மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்ளும் ஜாக்டோ  ஜியோ அமைப்பினர்,  லஞ்சம் வாங்கும் ஊழியர்களை யூனியனில் சேர்த்து கொள்ளமாட்டோம், அரசு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றி அதற்கு போராட தயாரா? அரசை மிரட்டி மக்களை வதைத்து சுயநலன்களை நிறைவேற்றி கொல்ல தான் உங்களுக்கு யூனியங்களும் சங்கங்களும் தேவைப்படுகின்றதா?

TAPS அறிவிப்புடன், தற்போது JACTTO–GEO போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சம வேலை – சம ஊதியம்,ஊதிய முரண்பாடு,மற்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன. 

TAPS என்பது, தவறான நிதி மேலாண்மை!

மக்கள் வரிப்பணத்தை பொறுப்பின்றி ஊதாரித்தனமாக செலவிடும் செயல்!

மாநிலத்தின் எதிர்கால கஜானாவை காலியாக்கும் திட்டம்!

திமுக அரசு இன்று, 98% மக்களுக்கான அரசாக அல்லாமல், 2% அரசு ஊழியர்களுக்கான அரசாகவே செயல்படுகிறது.

கடைநிலை தூய்மை பணியாளர் நியாமான போராட்டத்தை அடக்குமுறையை கொண்டு அடக்கியது. சுகாதார பணியாளரின் நியாமான சம்பள உயர்வு கோரிக்கையை இழுத்து அடிக்கிறது. இவை இரண்டுமே திமுக வாக்குறுதியில் இருந்தவை.

இந்த சமூக பொருளாதார அநீதியான TAPS திட்டத்தை சட்ட பஞ்சயாத்து இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு மிகக் கடுமையான நிதிச் சுமையில் தத்தளித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் உரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தாமல் கொண்டுவரப்படும் இந்த ஓய்வூதிய திட்டம் தமிழகத்தின் நிதி மேலாண்மை மற்றும் நிதி பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். எனவே உரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி, அரசு கஜானா வளமையான பிறகு வேண்டுமானால் இந்த TAPS ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்கலாம்.” என்று சட்டப் பஞ்சாயத்துக்கு இயக்கம் கூறியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com