
தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய கமலின் ம.நீ.ம. கட்சி சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால் இன்றைய இரண்டாம் கட்டப் பேச்சிலும் முடிவு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.நீ.ம. பொதுச்செயலாளர் அருணாச்சலம், தொகுதி எண்ணிக்கை குறித்து சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
தி.மு.க. தரப்பில் 2 தொகுதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டாலும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு அவர்கள் கூறியதைத் தாங்கள் ஏற்கவில்லை என்று அருணாச்சலம் தெரிவித்தார்.
“ கடந்த 2019, 2021 தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேட்டரி டார்ச் சின்னத்தின் மூலம் சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் மூலம் பெற்ற இச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தி.மு.க. குழுவிடம் தெரிவித்தோம். அவர்கள் கூறியதை தலைவர் கமலிடம் சொல்லி, அவருடைய முடிவின்படி செயல்படுவோம். ஓரிரு நாள்களில் ஊடகத்தினரை மீண்டும் சந்திப்போம். சின்னம் தொடர்பாகத்தான் இரு குழுக்களுக்கும் இரண்டு கருத்துகள் உள்ளன.” என்றும் அருணாச்சலம் கூறினார்.