மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய மின்சாரம் அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தலைமையில் தமிழ்நாட்டில் எரிசக்தி துறை சார்பாக நடைபெற்று வரும் மின் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எரிசக்தித்துறை சார்பாக நடைபெற்று வரும் மின் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் திட்டங்களான 1X800 மெ. வா., வடசென்னை அனல் மின் திட்டம் – III (மூன்றாம் நிலை), 2X660 மெ. வா., உடன்குடி அனல் மின் திட்டம் முதல் நிலை, 2X660 மெ. வா. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம், 1X600 மெ. வா. எண்ணூர் மிக உய்ய விரிவாக்க மின் திட்டம் ஆகிய அனல் மின் உற்பத்தி திட்டங்களின் கட்டுமானப் பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், மின் இழப்பைக் குறைப்பதற்காக 8,932 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடிக்க தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவலர்களை அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், மத்திய, மாநில அரசுகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.