
நெக்ஸ்ட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசு சட்டரீதியான போராட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
”ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறை மருத்துவப் படிப்புகளைப் பயின்று வரும் 2021--2022 கல்வி ஆண்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு, 2027 மார்ச் முதல் “நெக்ஸ்ட் என்னும் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளதாக “இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், எம்.பி.பி.எஸ் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு இத்தேர்வு 3 முதல் 4 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற பேராபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.” என்று இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வானது இரண்டு படிநிலைகளாக நடைபெறும். இந்திய மருத்துவ முறை மாணவர்களுக்கு இத்தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும்.
எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மாணவர்கள் மருத்துவராகத் தகுதி பெற நெக்ஸ்ட் தேர்வும், பட்ட மேற்படிப்பில் சேர “முதுகலை நீட் தேர்வும் என இரண்டு தேர்வுகள் அடுத்தடுத்து எழுத வேண்டும்.
நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறாத மருத்துவ மாணவர்கள் மீண்டும் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து மீண்டும் நெக்ஸ்ட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக் கல்வியைப் பயில தகுதித் தேர்வாக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டும், மாணவர்களின் உயிர் குடிக்கப்பட்டும் வருகிறது. தற்போது, மருத்துவக் கல்வியைப் பயின்று தேர்ச்சி பெற்ற மருத்துவ மாணவர்கள் மருத்துவராக பணியாற்றுவதற்கு நெக்ஸ்ட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று மற்றொரு ஆட்கொல்லி தேர்வை பாசிச மோடி அரசு மருத்துவத்துறையில் திணிக்க முயல்கிறது.
மருத்துவத்துறையில் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயத்தோடு காவிமயத்தையும் திணிக்கும் நோக்கில் பாசிச மோடி அரசால் இதற்கு முன்னர் இருந்த ஆணையங்கள் கலைக்கப்பட்டன.
என்.சி.ஐ.எஸ்.எம். சட்டம் 2020 மற்றும் என்.எம்.சி சட்டம் 2020 ஆகிய சட்டங்களின் அடிப்படையிலும் தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையிலும் ஆயுஷ் படிப்புகளுக்கு “இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையமும்” மற்றும் அலோபதி மருத்துவத்திற்கு “தேசிய மருத்துவ ஆணையமும்” உருவாக்கப்பட்டன.
இந்த ஆணையங்களின் உருவாக்கத்திற்குப் பிறகு யார் வேண்டுமானாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கலாம் என்னும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாணையங்களே தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகம் செய்துள்ளன. இத்தேர்வானது இந்திய மருத்துவக் கல்வியைச் சிதைப்பதாகவும், சுகாதார கட்டமைப்பைச் சீர்குலைப்பதாகவும் உள்ளது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாவிட்டால் மீண்டும் ஓராண்டு காத்திருந்து தேர்வு எழுத வேண்டும் என்பது பின்தங்கிய, ஏழை, எளிய மருத்துவ மாணவர்களுக்கு பெரும் சுமையை உண்டாக்கும். பயிற்சி காலம் முடிந்ததும் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டிய அரும்பெரும் பணியிலும், தங்கள் குடும்ப சுமைகளை தாங்க வேண்டிய சூழலிலும் இம்மருத்துவ மாணவர்கள் இருக்கிறார்கள்.
இச்சூழலில் இத்தேர்வு எழுதுவது என்பது பெரும் சுமையை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். நீட் தேர்வு போல் இத்தேர்வினால் மருத்துவ மாணவர்களின் தற்கொலைகள் அதிகரிக்கக் கூடும்.
முக்கியமாக, மாணவிகளுக்கு திருமணம், பேறுகாலம் ஆகிய காரணங்களால் இத்தேர்வு எழுதப் போகும் காலத்தில் கடினமான சூழலை உருவாக்குவதுடன், அவர்களை மருத்துவத்துறையை விட்டே வெளியேற்றும் சூழலையும் உருவாக்குகிறது.
எனவே, பின்தங்கிய, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கும், பெண்களுக்கும் மருத்துவக் கல்வியை மறுக்கும் மனுநீதி அடிப்படையிலேயே இத்தேர்வைத் திணிக்கிறது இந்த பாசிச பா.ஜ.க கும்பல்.
இத்தேர்வால் மாணவர்கள் செயல்முறை மூலமாக மருத்துவம் கற்பது குறைந்து, புத்தகங்களை மனப்பாடம் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுவர். இது மருத்துவத்துறையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும்.
கூடுதலாகப் பயிற்சி பெற நீட் பயிற்சி மையங்கள் போல் நெக்ஸ்ட் தேர்வு பயிற்சி மையங்களுக்குப் பின்னே மாணவர்கள் ஓடும் சூழல் உண்டாகும். இதனால் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட இத்தேர்வு மிகப்பெரிய வாய்ப்பை உண்டாக்கித் தருகிறது.
மருத்துவக்கல்வியை தரமாக்கவும், தரமான மருத்துவர்களை உருவாக்கவும் இத்தேர்வைக் கொண்டு வருவதாக ஒன்றிய பா.ஜ.க அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மருத்துவக் கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டதன் விளைவாக மருத்துவக் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்களோ, மாணவர்கள் மருத்துவம் பயிலத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளோ இருப்பதில்லை.
மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யாதது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்க அனுமதிப்பது போன்ற விசயங்களால் மருத்துவக் கல்வி படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்பட்டு மருத்துவராக உருவாவதை விடுத்து மாணவர்களே தங்கள் சொந்த முயற்சி மூலம் தங்களை மருத்துவர்களாக உருவாக்கிக் கொள்ளும் நிலையை இத்தேர்வு உருவாக்கியுள்ளது. இதனால் தரமான மருத்துவர்கள் உருவாவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், இத்தேர்வானது மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம், மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெறுவதைக் கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம் சிறிதளவேனும் உள்ள மாநில அரசின் உரிமைகளையும் பறிக்கும் ஒன்றாகவே உள்ளது.
இந்திய ஒன்றியத்திலேயே அதிகளவிலான மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இச்சூழலில், ஒன்றிய அரசின் நெக்ஸ்ட் தேர்வால் அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டின் மாணவர்கள் தான்.
எனவே, பொது மருத்துவ கட்டமைப்பை சிதைக்கும், மருத்துவ மாணவ, மாணவிகள் மருத்துவர் ஆவதைத் தடுக்கும் மனுநீதி அடிப்படையிலான இத்தேர்வையும், மருத்துவத்துறையை கார்ப்பரேட் மயமாக்கி வரும் ஒன்றிய அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான போராட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
மேலும், இந்திய ஒன்றிய முழுவதும் ஒருமித்த கருத்துக்களைக் கொண்ட அரசியல் கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் ஒன்று திரட்ட வேண்டும்.” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.