மாணவர்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல்- வைகோ கண்டனம்

வைகோ
வைகோ
Published on

”நீட் தேர்வை இரத்து செய்யக் கோரியும், நீட் கேள்வித் தாள் வெளியானதற்குக் காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் டில்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 ஆம் நாள் இலட்சக்கணக்கான மாணவர்களும், கரப்பான் பூச்சி இயக்கத்தினரும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை குண்டாந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. கண்ணீர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது. பல மாணவ - மாணவிகள் படுகாயமுற்றனர். டில்லி நகரம் ஒரு இராணுவ கூடாரம் போல் காட்சி அளித்தது.” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ தடியடியால் காயப்பட்ட மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஆங்காங்கு பாதுகாக்கப்பட்டனர். தடியடியில் காயமுற்ற மாணவர்கள் டில்லியில் மண்டி ஹவுஸ் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள சுர்ஜித் பவனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பேபி அவர்களும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் அம்மையாரும், நானும் ஆங்காங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே சுர்ஜித் பவனுக்குச் சென்றோம். தடியடியில் காயப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் தோள் கொடுப்போம் - துணை நிற்போம் என்று உறுதி கூறினோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவ - மாணவியர் காலவரையறையற்ற உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டிருந்ததால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வேண்டி தோழர் பேபி அவர்கள், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாநிலை அறப்போரை முடித்து வைத்தார்.

நான் அம் மாணவர்களிடையே போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும்போது,

“இந்த மாணவர் போராட்டம் நியாயமான காரணங்களுக்காக வெடித்து எழுந்த உரிமைப் போராட்டமாகும். தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நீட் தேர்வு முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டுமூ, நீட் கேள்வித் தாள் வெளியானதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ - மாணவிகள் மீது அராஜக தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரை உடனடியான பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கிவிட முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டேன்.

கரப்பான் பூச்சி இயக்கத்தினரும், எண்ணற்ற இளைஞர்களும் இப்போராட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று போராடுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழம் தன்னுடைய முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, உரிமைக்காக, நியாயத்திற்காக, நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கிளர்ந்தெழும் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டும், துணை இராணுவத்தைக் கொண்டும் அடக்க மேலும் முனைந்தால் அது புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.” என்று  வைகோ கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com