
சுயேச்சையாக இயங்கக் கூடிய மாநில தேர்தல் ஆணையங்களை சீர்குலைக்கும் நோக்கில் - மாநில தேர்தல் ஆணையர்கள் அகில இந்திய மாநாடு நடத்துவதாக சிபிஐ(எம்) வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“ இந்திய தேர்தல் ஆணையம் எதிர்வரும் பிப்ரவரி 24, 2026 அன்று மாநில தேர்தல் ஆணையர்களின் அகில இந்திய மாநாட்டை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இது கூட்டாட்சிக்கும், சுயேச்சையாக இயங்கக்கூடிய அமைப்புகளுக்கும் விரோதமான செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து கூட்டாட்சி மீதும், மாநில அதிகாரங்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. 25 ஆண்டுகளாக இப்படியொரு மாநாடு நடந்ததில்லை. தற்போது இம்மாநாட்டை நடத்துவதற்கு காரணம் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற தனது அதிகாரக் குவிப்பு நோக்கத்தை முன்னிட்டே ஆகும்.
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுக்க கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமையை எஸ்.ஐ.ஆர் பறித்த வேளையில், மாநிலத் தேர்தல் ஆணையங்களையும் "ஒருங்கியக்கம்" என்று அழைப்பது அநீதிக்கு துணை போவதேயாகும்.
மாநில தேர்தல் ஆணையங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 73 மற்றும் 74ன் படி மாநிலத்தில் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை நடத்தி வருகின்றன. அந்தந்த மாநிலங்களின் சட்டத்திற்கு உட்பட்டு சுயேட்சையாக இயங்க கூடிய மாநில தேர்தல் ஆணையத்தை சீர்குலைப்பதே இம்மாநாட்டின் நோக்கமாக இருக்கும். மேலும், ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நோக்கத்திற்கு இயைந்து போகச் செய்வதற்கும் இந்த மாநாடு பயன்படும். சுயேட்சையாக இயங்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி விட்டது என்பதால் மாநில தேர்தல் ஆணையங்களையும் அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, மாநில தேர்தல் ஆணையர்களின் மாநாட்டை கைவிடுமாறும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.” என்று பெ.சண்முகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.