மானாமதுரை சங்கதி என்ன? - மா.சு. தந்த விளக்கம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசைச் சாடியிருந்தார். அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்து:  

”மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க் கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.

 எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? எனத் தினமும் ஏங்கும் ’ஆண்ட்ராய்டு போபியோ’ வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் ஜனவரி 5-ம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

 கூட்டணிக் கட்சிகள் யாராவது வர மாட்டார்களா? என அல்லாடும் பழனிசாமிக்குக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் அடி வயிறு எரியத்தானே செய்யும். துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்.” என்று மா.சு. கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com