சுற்றுச்சூழல், மீனவர்களையும் பாதிக்கும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
”சென்னை பெருநகர மக்களுக்கு குடிநீர் வழங்கி நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு மாமல்லன் நீர்த்தேக்கத்தை அமைப்பதன் மூலம் கோவளம் பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை திமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் ஊழல் செய்யும் நோக்குடன் திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.” என அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பங்கழிகளை அழித்து 5,161 ஏக்கர் நிலப்பரப்பில் மாமல்லன் நீர்த்தேக்கத்தை அமைக்கும் பணிகளை தி.மு.க. அரசு தொடங்கியிருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மேடவாக்கம், பள்ளிக்கரணை தொடங்கி சோழிங்கநல்லூர், மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளதாகவும், 1.66 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இந்தப் பகுதிகளுக்கு தினமும் 17 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
”சென்னை பெருநகர எல்லையும், மக்கள்தொகையும் ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிகரித்து வரும் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், சென்னையில் பெய்யும் மழை மூலம் கிடைக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இயற்கை நமக்கு அளித்த கழிவெளிகளை அழித்து இத்தகைய நீர்த்தேக்கங்களை அமைப்பது இயற்கை மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கவே முடியாது.
மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் பகுதி இயற்கையின் அதிசயம் ஆகும். இங்கு தான் கடல் நீரும், நன்னீரும் கலக்கின்றன. அதனால், இந்த பகுதியில் தான் அரிய வகை நண்டு, இரால், மீன்கள் போன்றவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன, அதுமட்டுமின்றி, சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய இந்த நீர்நிலையின் தனித்துவமான தன்மைக்காகத் தான் இங்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. கடல் நீரும், நன்னீரும் சங்கமிக்கும் இடமாக உள்ள இப்பகுதியை நீர்த்தேக்கம் என்ற பெயரில் அடைத்து விட்டால் இதன் தனித்துவம் அழிந்து விடும். அதனால், இப்பகுதியில் உள்ள மீன்வளம் அழிந்து விடும்; அதுமட்டுமின்றி வெளிநாட்டு பறவைகள் வலசை வருவதும் நின்று விடும். இவ்வளவு பாதிப்புகளையும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் ஏற்படுத்தும் மாமல்லன் நீர்த்தேக்கம் தேவையா? என்பது தான் எனது வினா.
மாமல்லன் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிகளில் பல மீனவர் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு இந்த பகுதியில் மீன் பிடிப்பது தான் வாழ்வாதாரமாகும். மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதால் அங்குள்ள மீன் வளம் முற்றிலுமாக அழிந்து விடும். அதனால், 5000 மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பார்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக பல இடங்களில் புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அது ஏமாற்று வேலை ஆகும். மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் பகுதி தான் கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதி ஆகும். அங்கு உள்ள இயல்பான நீர் கால்வாய்களில் வரும் போது தான் அவற்றில் நண்டு, இரால் போன்றவை குஞ்சு பொரிக்கின்றன. அந்தப் பகுதியை நீர்த்தேக்கமாக்கி, அதன் தன்மையை மாற்றும் பட்சத்தில் எத்தனைக் கால்வாய்கள் அமைத்தாலும் அவற்றில் நண்டு, இரால், மீன்கள் உற்பத்தியாக வாய்ப்பில்லை.
மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவது அப்பகுதியில் உள்ள கழிவெளிகளை நம்பியிருந்த மக்களை மட்டுமின்றி, கடல் வளத்தையும் கடுமையாக பாதிக்கும். உப்பங்கழி, கடல்முகத்துவாரம், சதுப்பு நிலங்கள் இணைந்த இந்தப் பகுதி தான் கடலில் உள்ள மீன்களுக்கு தாய். இங்கு குஞ்சு பொரித்து பெரிதாகி கடலுக்குச் செல்லும் மீன்கள் தான் கடல் மீனவர்களுக்கு வாழ்வாதாரமாகின்றன. நீர்த்தேக்கம் என்ற பெயரில் இந்தப் பகுதி அழிக்கப்பட்டால் அது கடலில் மீன்வளம் குறைவதற்கு முதன்மைக் காரணமாக மாறும்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படியும் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவது சட்டவிரோதம் ஆகும். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி உருவாக்கப்பட்டு வரும் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின் வரைபடத்தில் மீனவர்களின் மீன்பிடி பாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டால் அந்தப் பகுதியில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதனால், திமுக அரசு திட்டமிட்டே மீன்பிடி பாடுகளை பதிவு செய்யாமல் விட்டு, அதன் மூலம் இந்தத் திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களுக்கு துரோகம் செய்கிறது. கடல்தாயின் குழந்தைகளான மீனவர்கள் இந்தத் துரோகத்தை மன்னிக்கவே மாட்டார்கள்.
மக்கள் நலனிலும், சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் பொதுவெளியில் விவாதம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அத்தகைய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை இது குறித்த எந்த திட்டமும் அரசிடம் இல்லை. தேர்தல் வரவிருக்கும் நிலையில், தங்களின் பழைய தவறுகளை மறைக்கும் நோக்குடனும், ரூ.342 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் பணப்பயன்களை கருத்தில் கொண்டு தான் இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படுகிறது.
கோவளம் பகுதியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் ஆகும். இதை உணர்ந்து மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் துணை நிற்பது என பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்றுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட திமுக அரசு மறுத்தால், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய ஆட்சியில் இத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட மீனவர்களின் நலன்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. எடுக்கும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.