மார்ச் 8இல் திருச்சியில் தி.மு.க. மாநாடு!

anna arivalayam glittering with Iluminating lights
அண்ணா அறிவாலயம்
Published on

மார்ச் 8இல் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடத்துவதென இன்றைய மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அக்கட்சியின் மா.செ. கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இதுவும் ஒன்று.

மேலும், பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதுபோது கழக அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் கழகத்திற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்தப் பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக கழத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு தீர்மானத்தில், “ பிப்ரவரி-1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திரப் பரப்புரையாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 4 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இப்பரப்புரைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்து ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடுவது என” என்று கூறப்பட்டுள்ளது.

“வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2),

100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) ஆகியோரைத் தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ‘‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’’ - வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. அதன்படி பிப்ரவரி-11 அன்று சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம் - படப்பையிலும், பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21 அன்று தெற்கு மண்டலம் மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்தவும்” தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை முன்னரே கூறிக்கொள்ளும்வகையில் மார்ச்-8 அன்று திருச்சியில் 10 இலட்சம் கட்சியினர் கலந்துகொள்ளும்வகையில் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரில் மாபெரும் மாநில மாநாட்டை நடத்துவதென முக்கியமான தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com