சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலருக்கும், அதே பகுதியில் உள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சில நாள்களுக்கு முன்னர் முகாமில் உள்ள இரண்டு இளைஞர்களை, அதே பகுதியில் உள்ள இருவர் இரும்புக்கம்பி, கத்தி ஆகியவற்றால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த காணொலி சமூக ஊடகங்கள் மூலம் வெளியே வந்து தகவல் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்டவர்கள் பால்ராஜ், பத்மநாபன் என்றும் இவர்களைத் தாக்கியவர்கள் கிருஷ்ணகுமார் என்ற வெள்ளையன், சரத் ஆகியோர் என்றும் உறுதியானது.
தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைக் காவல்துறை தேடிவருகிறது.