முதல்வருக்கு இராமதாஸ் சொல்லும் அறிவுரை!

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
Published on

பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

”தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தலைநகர் சென்னையில்  கட்டிடங்களின் அதிகரிப்பாலும்,நெருக்கடியாளும்  போதுமான வடிகால் வசதிகள் முறையாக இல்லாததாலும், நெகிழி குப்பைகளின் பயன்பாட்டினாலும் கனிசமான மழைக்கே தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளிக்கின்ற அபாயகரமான சூழல் முன்பு எல்லாம் நிலவியது. இதனால் வீடுகள்,  தெருக்கள், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கும், புழங்குவதற்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். புறநகர் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் நிலைமை இப்போதும் மோசமாக இருக்கிறது. ஓரிரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால் வடகிழக்கு பருவ மழை காலங்களில் அதிகப்படியான பாதிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள்.  இதுபோன்ற இடர்பாடுகள் நிகழாமல் தவிர்க்க ஊள்ளாட்சி துறை கண்கானித்து பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து செய்திட வேண்டும்.” என அறிக்கை ஒன்றில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

”மழையால் வெள்ளத்தால் பாதிப்பு அடையும் என கண்டு அறிந்த பகுதிகளை பேரிடர் மேலாண்மைத் துறை, உள்ளாட்சி, பொதுப்பணித்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை,  மற்றும் சுகாதார துறை இணைந்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளை பொதுப்பணி துறை  கண்காணிப்பை மேற்கொண்டு ஏரிகளின் கொள் அளவு நீரை பாதுகாப்பாக தேக்கம் செய்ய வழி செய்ய வேண்டும். வடிகால் வெள்ளம் கரைபுரண்டோடும் பகுதிகளை சீரமைத்து, குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால அனுபவங்களை கொண்டும், தற்போதைய சுமாரான மழையால் ஏற்படும் பாதிப்புகளை  கொண்டும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி,  நகராட்சி,  பேரூராட்சி, கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும் பகுதிகள், வெள்ளம் சூழும் பகுதிகள்போன்றவற்றை கண்டு அறிந்து அப்பகுதிகளில் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் படி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  வடிகால், கழிவு நீர் கால்வாய்கள், குளம், குட்டைகள்  போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் இயங்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல இடங்களில் மழையில்  நெல்மணிகள் நனைந்து முளைப்புத்திறன் ஏற்பட்டு வீணாகின்ற செய்திகள் வந்து கொண்டு உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய அன்று வருகின்ற நெல் மூட்டைகளை அன்றே எடை போட்டு கொள்முதல் செய்து அரசின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மூட்டைகளை மூடுவதற்கு போதிய விரிப்புகள் கொள்முதல் செய்ய வேண்டும். விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் சேதமடையாமலிருக்க வெள்ளம் சூழும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், நீரோடைகளை சீரமைக்க வேண்டும். உப்பளங்கள் போன்ற திறந்தவெளியில் இயங்கும் தொழிற்பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க  வேண்டும். மழை காலத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை உடனே ஏற்படுத்தி மழை காலத்தில் தங்கு தடை இன்றி மின் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சிறப்புகவனம் செலுத்தி அணைகள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், ஏரிகள் போன்றவற்றைக்  கண்காணிப்பதுடன்,  அவைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆறுகள், கிளை ஆறுகள் மூலமாக தங்குதடையின்றி வெளியேறி ஏரிகளில் நிரம்பவும், பாசனப் பகுதிகளில் பாய்ந்தோடவும், கடைமடைவரை செல்லவும் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளைக் கண்டு அறிந்து மக்களை போதிய வசதிகள் உடன் முகாமில் தங்க வைக்க முன்னேற்பாடுகள் தயாராக இருக்கவேண்டும்.  மழைக்கால நோய்த் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்வகையில் குக்கிராமங்கள் தொடங்கி மாநகரங்கள்வரை மருத்துவக் கட்டமைப்புகளைச் சீரமைத்து நோய்த் தொற்றுகளுக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்கவும் மருத்துவர்கள்,  மருத்துவப் பணியாளர்கள் திறம்படப் பணியாற்றவும் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com